இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பே விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்-அமைச்சர் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் வரும் 20-ம் தேதி இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தியை; நாடாளுமன்றக் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, நான் சொன்னதின் பேரில், கடந்த மாதம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளை டெல்லியில் பிரதமரை 27.12.2013 அன்று சந்திக்க வைத்தபோதே, பிரதமர்; மீனவர் பிரதிநிதிகளிடமும், டி.ஆர்.பாலுவிடமும் ஜனவரி மாதம் 20-ம் தேதி வாக்கில் இரண்டு நாட்டின் மீனவர்களின் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள் என்று பிரதமர் உறுதி கூறி, அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும், அப்போதே வெளிவந்து விட்டது.
அந்த செய்தியைத் தான் பதினைந்து நாட்கள் கழித்து தமிழக முதல்-அமைச்சர் அறிக்கையாகத் தெரிவித்திருக்கிறார். எப்படியோ அந்த பேச்சுவார்த்தை நடைபெற்று, நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டாக வேண்டும். ஆனால் அந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து காவல் நீடிக்கப்பட்டு, அங்கே சிறையில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களும் அந்த அரசினால் விடுதலை செய்யப்பட வேண்டும். பேச்சுவார்த்தையின்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வர அது மிகவும் உதவியாக இருக்கும். தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர், நிச்சயமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இன்றைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் மீனவர்களுக்கு அதிமுக அரசு செய்த உதவிகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மீனவர்களுக்குச் செய்த உதவிகளை நினைவூட்ட வேண்டுமேயானால், திமுக ஆட்சியில், மே 2006 முதல் ஜனவரி 2011 வரை 88 கோடியே 57 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிவாரணம்-நிவாரணத்தொகை 1,200 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாக உயர்வு-மீனவ மகளிருக்கு 61 கோடியே 57 லட்சம் ரூபாய் நிவாரணம்-மீன் பிடிப்பு தடைக்காலத்தில் 14 கோடியே 33 லட்ச ரூபாய் நிவாரணம்-உயிரிழக்க நேரிடும் மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் 3 லட்சம் ரூபாயாக உயர்வு-மா.சிங்காரவேலர் நினைவு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 21 கோடியே 12 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு-27 கோடி ரூபாய் செலவில் குளச்சல் மற்றும் தேங்காய் பட்டினத்தில் மீன் பிடித் துறைமுகங்கள்-50 கோடி ரூபாய் செலவில் நாகை மாவட்டம் பூம்புகாரில் மீன் பிடித் துறைமுகம் - தமிழ்நாடு மீனவர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, 4 கோடியே 52 லட்சம் ரூபாய் நிவாரண உதவி என்று நான் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் முதல்-அமைச்சர் விடுத்த அறிக்கையில் வழக்கம்போல என்னைப் பற்றியும் பல கண்டன விமர்சனங்களை செய்திருக்கிறார். மீனவர் பிரச்சினை பற்றி 7-1-2014 அன்று முதல்-அமைச்சர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் வாயிலாக விடுத்த வேண்டுகோளைப் பற்றி நான் குறிப்பிடும்போது; "மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்க நாள் குறிப்பிட வேண்டுமென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை" என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறாரே, அதற்கு முதல்-அமைச்சரின் பதில் என்ன என்று நான் கேட்டதற்கு, "குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல" என்ற பழமொழி நினைவிற்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்ற பிரச்சினை அல்ல, நடுக்கடலிலே மீன் பிடிக்கின்ற பிரச்சினை என்பதை முதல்-அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications