முகுந்த் வரதராஜன் குடும்பத்துக்கு ரூ. 12 லட்சம் பணமுடிப்பு
சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 12 லட்சம் நிதியை வழங்கியுள்ளது. இதை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவிடம் அளித்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 44-வது ராஷ்டிரீய துப்பாக்கிகள் படை பிரிவில் பணியாற்றி வந்த சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அத்துயர செய்தியை அறிந்த ஜெயலலிதா கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதியன்று அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததோடு ரூ.10 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் துணிச்சல் மிக்க தீரச்செயலைப் பாராட்டி இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருதினை சென்ற மாதம் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவின் போது குடியரசு தலைவர் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீசிடம் வழங்கினார்.
தாய் திருநாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் துணிச்சல் மிக்க தீரச் செயலைப் பாராட்டி மத்திய அரசு வழங்கும் சக்ரா விருதுகளை பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பணமுடிப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டதையொட்டி தமிழக அரசின் சார்பில் பண முடிப்பாக வழங்கப்படும் ரூ.12 லட்சத்துக்கான காசோலையை தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீசிடம் தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, தலைமை செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத்துறை முதன்மை செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், பொதுத்துறை கூடுதல் செயலாளர் வெ.பழனிக்குமார், மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய்-தந்தை ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications