அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் நிலை மோசமடைந்தது... மீண்டும் நேரில் வந்து பார்த்தார் ஓபிஎஸ்
சென்னை: தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
திங்கள்கிழமை பிற்பகல் வரை தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் அமைச்சர் செந்தூர் பாண்டியன். அதன் பின்னர் மாலையில் அவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அடையாரில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் நேற்று அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இன்று மேலும் மோசமடைந்தது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக திங்கள்கிழமை செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் இன்றும் அவர் செந்தூர் பாண்டியனை நேரில் போய்ப் பார்த்தார். அதேபோல தமிழக அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
செந்தூர் பாண்டியனுக்கு மூளை செயலிழந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதை சரி செய்யும் முயற்சியில் நரம்பியல் நிபுணர் தலைமையிலான டாக்டர்கள் குழு போராடி வருகிறது.
63 வயதான செந்தூர் பாண்டியன் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் ஆவார்
தென்காசி அருகேயுள்ள கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி நடந்த யாகங்களில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டுவிட்டு அன்றே சென்னை சென்றார் செந்தூர் பாண்டியன். அதற்கு அடுத்த நாள்தான் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications