ஜெ. வெளியே வரக்கூடாதுன்னுதான் அமைச்சர்கள் பூஜை செய்கிறார்களோ? சந்தேகம் கிளப்பும் ஈ.வி.கே.எஸ்!!
சென்னை: கோவில்களில் பால்குடம், அக்னிசட்டி, காவடி எடுப்பது போல தமிழக அமைச்சர்கள் நடிப்பதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். ஒருவேளை ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரக்கூடாது என்றுதான் இந்த அமைச்சர்கள் கோவில்களில் பூஜை செய்கிறார்களோ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ற மே தின எழுச்சி நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி சார்பில் இளங்கோவன், குஷ்பு ஆகிய இருவருக்கும் கிரீடம் அணிவித்து, வீரவாள் அளித்து மரியாதை அளிக்கப்பட்டது.

எதுவுமே கிடைக்கலையே
அதைத்தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின்சார தடை இருக்காது, ரேசன் கடையில் தாய்மார்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் கூறிய ஏதாவது ஒன்று கிடைத்ததா? என்று கேட்டால் பதில் கிடையாது.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அனைத்து ஊர்களிலும் காமராஜர் பள்ளிக்கூடங்கள் திறந்தார். ஆனால் தற்போது ஊருக்கு ஊர், தெருவுக்கு தெருவாக டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததா? என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கோவில் கோவிலாக அமைச்சர்கள்
தமிழகத்தில் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நல்லாட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எந்த காரியங்களும் நடைபெறவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோவிலில் பாலாபிஷேகம், மண் சோறு, அங்க பிரதட்சணம் செய்கிறார்கள். 108 பசுமாடுகளை வைத்து கோ பூஜை செய்கிறார்கள்.
வெளியே வரக்கூடாது சாமி
இதெல்லாம் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்று செய்யவில்லை. விடுதலையாகி வெளியே வரக்கூடாது என்றுதான் கோவில்களில் பூஜை செய்கிறார்கள். இது உலகமாக நடிப்பாக உள்ளது என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சி ஓட்டு போடுங்க
தமிழகத்தில் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. லஞ்ச லாவண்ய ஆட்சியை அகற்ற காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் வளமான வாழ்வு அமைய வருகிற 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று போகிற போக்கில் வாக்கு சேகரித்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications