லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைத்தார் 'டி.ஆர்.' தம்பி வாசு!
ஈரோடு: லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை டி. ராஜேந்தரின் தம்பி டி. வாசு தொடர்ந்து நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தர் தமது கட்சியை கலைத்து விட்டு திமுகவில் ஐக்கியமானார்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார். கருணாநிதியின் அழைப்பை ஏற்று திமுக-வில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் டி.ராஜேந்தர் கூறி்னார்.

ஆனால் லட்சிய திமுக தொடர்ந்து செயல்படும் என்று அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ரோலக்ஸ் பாலன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், டி.ராஜேந்தர் ஏழு ஆண்டுகளாக கட்சி நடத்தினாலும் இது வரை கட்சிக்காக எந்த நன்மையும் செய்யவில்லை.
அவர் மட்டும் தான் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அவருடன் எந்த நிர்வாகிகளும் உடன் செல்லவில்லை. இது கூட, ஏதோ பிரச்னையால் அவர் மிக அவசரமாக எடுத்துள்ள முடிவு தான். டி.ராஜேந்தரைப் பொறுத்தவரையில் அவரது மகன் சிம்பு பிரச்னை தான் காரணம். ஒரு நிறுவனத்திடம் பணம் கொடுத்து ஏமாந்த பிரச்னை போல நிறைய விவகாரங்களில் சிக்கி தவிக்கிறார் என தெரிய வந்துள்ளது.
லட்சிய திமுக மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 5 ந் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டி.ராஜேந்தரின் தம்பியும் அமைப்பு செயலாளருமான டி.வாசு மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படும். மேலும், பிப்ரவரி 23ந் தேதி நெல்லையில் மாநில மாநாடு நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications