தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்.. ஸ்தம்பிக்க போகும் சுற்றுலாப் பயணிகள்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியதால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியதால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறைக்கு செல்லும் பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுவர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் வரும் மே 15-ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த 4-ஆம் தேதி அறிவித்தனர். முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

முதல்வருடன் பேச்சுவார்த்தை
முதல்வர் எடப்பாடியுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதாக தெரிவித்தார். எனினும் ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக அரசு ஒப்புக் கொள்வது எந்தவிதத்தில் நியாயம் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை
இந்நிலையில் தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

மேலும் ரூ.500 கோடிக்கு ஒப்புதல்
இன்று சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் மேலும் ரூ.500 கோடி நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்தார். எனினும் இதை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்
தமிழக அரசு தங்களுக்கு நாமம் போட்டு விட்டதாக கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் கருத்து தெரிவித்து நாளை தொடங்கவுள்ள வேலைநிறுத்தத்தை இன்றே தொடங்கினர். இதனால் பேருந்துகளை இயக்காமல் திருவான்மியூர், பல்லவன் இல்லம் ஆகிய பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. மேலும் சென்னை, தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், அரியலூர், கோவை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பொதுமக்கள் பாதிப்பு
இதனால் பல்வேறு ஊர்களுக்கு பணி நிமித்தமாகவும், அலுவல் நிமித்தமாகவும் வெளியூர்களுக்கு செல்ல பேருந்துகளில் உட்கார்ந்திருந்த மக்களை இறங்குமாறு கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோடை விடுமுறை
தற்போது கோடை விடுமுறை என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் இரவு நேரங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அடித்து பிடித்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் இந்த பேருந்து ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள்
கோடை வெயில் அதிகரித்து வருவதால் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணாறு உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் அந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதிலும், மற்ற ஊர்களில் இருந்து அங்கு செல்லவிருக்கும் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத உறவினர்கள் வீட்டுக்கு மக்கள் செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு
காலவரையற்ற வேலைநிறுத்தம் என்பதால் இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த போராட்டம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. இதனால் கண்டிப்பாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விதிப்பு, இன்சூரன்ஸ் கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
அரசுக்கு பெரும் நஷ்டம்
மேலும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படுவதாலும் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களும் ஸ்டிரைக்கை தொடங்கியதால் தமிழக அரசுக்கு கடும் வருவாய் ஏற்படும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications