திருச்சி எம்.பி குமாரின் சவாலை ஏற்று எடப்பாடி பதவியை பறித்த தினகரன்!
திருச்சி எம்பி குமாரின் சவாலை ஏற்று எடப்பாடியின் பதவியை டிடிவி தினகரன் பறித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தன்னை கட்சி பதவியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பதவியை பறிக்கும் தைரியம் இருக்கிறதா என்று திருச்சி எம்பி குமார் சவால் விட்டிருந்தார். அவருக்கு பதில் தரும் வகையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கியுள்ளார் தினகரன்.
அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை திரும்ப பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என தினகரன் கூறினார்.

வைத்திலிங்கம், முக்கிய அமைச்சர்கள், கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளின் பதவிகளை அடுத்தடுத்து பறித்தார் தினகரன். இந்நிலையில் அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி எம்பி குமாரை நேற்று அதிரடியாக நீக்கினார் தினகரன்.
அப்போது திருச்சியில் பேட்டியளித்த எம்பி குமார், தேவையில்லாமல் மூத்த நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து வருகிறார் தினகரன். ஜெயலலிதா கொடுத்த பதவிகளை பறிக்க இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
தினகரனுக்கு தைரியம் இருந்தால் முதல்வர் எடப்பாடியின் கட்சி பதவியை பறித்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் இவரது சவாலை ஏற்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி அறிவித்திருக்கிறார் தினகரன்.












Click it and Unblock the Notifications