மதுரையில் டாஸ்மாக் மதுவை குடித்த 2 பேர் பலி!
மதுரை: மதுரை அருகே டாஸ்மாக்கில் விற்ற மதுவை குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்துள்ள காரியாப்பட்டி பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தவர்கள் மலைச்சாமி மற்றும் குருசாமி. இவர்கள் இருவரும் இன்று (23ஆம் தேதி) அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கியுள்ளனர். பின்னர் அருகில் இருந்து ஓய்வுக் கூடத்திற்கு சென்று ஆளுக்கு பாதியாக குடித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், பாதி பாட்டிலை குடித்து முடிப்பதற்குள் குருசாமி சம்பவ இடத்திலேயே தொண்டையை பிடித்துக் கொண்டு இறந்து விட்டார். இதையடுத்து, உயிருக்கு போராடிய மலைச்சாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவரும் உயிரிழந்துவிட்டார். டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், பதற்றமடைந்துள்ளனர். ''இருவரும் மது குடித்ததும் முதலில் குருசாமிதான் தொண்டையில் கை வைத்துக்கொண்டு சுருண்டு விழுந்து இறந்தார். உயிருக்கு போரடிய மலைச்சாமியை காப்பாற்ற 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தோம். ஆனாலும் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு போகும் போது அவர் உயிரிழந்துவிட்டார் என்றனர்.
டூப்ளிகேட் சரக்குகளை டாஸ்மாக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதால்தான் அநியாயமாக இரண்டு உயிர்கள் பலியாகிவிட்டன என்று சம்பவத்தை பார்த்தவர்கள் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications