தாமிரபரணி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடி: ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவனை தண்ணீர் இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற சென்ற தனியார் பேருந்து நடத்துனரையும் காணவில்லை. எனவே இருவரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் இருவரையும் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு தேவைக்கு அதிகமான அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிகிறது. மாவட்டத்திலுள்ள குளம், குட்டைகள் நிரம்பி உள்ளது.
இந்நிலையில், ஏரல் ஆற்றுப்பாலத்தின் மேலே தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுவட்டார மக்கள் ஆத்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊர்களை சுற்றியே சென்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஞாயிறன்று விடுமுறை நாள் என்பதால் தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுமார் 10 பேர் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் குளிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவர்களை ஆற்றில் குளிக்கவிடாமல் தடுத்துள்ளனர்.
இதில் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள், அதே ஆற்றின் தொடர்ச்சியில் இருக்கும் வாழவல்லான் என்கிற கிராமத்தின் அருகே உள்ள தடுப்பனை பகுதியில் குளித்துள்ளனர். அப்போது, தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த பிரதீஷ் (21) உட்பட சில மாணவர்கள் திடீரென இழுத்து செல்லப்பட்டனர். அதனை பார்த்த மற்ற மாணவர்கள் கூச்சல் போடவே, அந்த பகுதியை சேர்ந்த மாவளிராஜ் (50) என்பவர் உட்பட 20 பேர் ஆற்றில் குதித்து மாணவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர்களை காப்பாற்ற சென்ற மாவளிராஜ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை தேட தொடங்கினார்கள். வெகுநேரம் ஆகியும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்கள் இடைக்காததால் இரவு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின் நேற்றும், இன்று அதிகாலையிலிருந்தும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடியை சேர்ந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் கயிறு க்ட்டி இறங்கியும், டியூப் மற்றும் படகு மூலம் சென்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பிரதீஷ்,தூத்துக்குடி பிரையன்நகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் உடை மரங்கள் அதிகம் இருப்பதால் மீட்பு பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் அதை பொருட்படுத்தாது தொடர்ந்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் இருவரின் குடும்பத்தினரும் கண்ணீருடன் ஆற்றின் கரையில் காத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்தான் அதே ஏரல் பாலம் வழியாக இருச்சக்கர வாகனத்திர் சென்ற பன்னைவிளையை சேர்ந்த ஜெயபால் என்பவரை தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.
ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அவர் பிடித்து கொண்டு கூக்குரலிட்டபடியே இருந்துள்ளார். அப்போது, ராஜபதி என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவர் தைரியமாக தண்ணீரில் குதித்து ஜெயபாலை காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் ஜெயபாலின் இருசக்கர வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
உயிரிழப்புகளுக்கு முடிவுகட்டவே பலகோடி ரூபாய் மதிப்பில் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்ட ஆரம்பிக்கப்பட்டு முழுமை பெறாமல் உள்ளது. பாலம் முழுமை பெறாமல் இருப்பதற்கு வனதுறையின் அனுமதி கிடைக்காமல் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு பிறகாவது வனத்துறையின் அனுமதி கிடைத்து பாலம் முழுமை பெற்று விரைவில் திறக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications