மட்டன் பிரியாணியையும், சிக்கன் 65யையும் ஏர்போர்ட்ல மறந்து வச்சிட்டுப் போனது யாருய்யா?
சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பயணிகள் புறப்பாடு பகுதி 2வது நுழைவாயில் அருகே ஒரு பை நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பையில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களது சோதனையில் அப்பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பையை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதில், இரண்டு மட்டன் பிரியாணி பார்சல்களும், ஒரு சிக்கன் 65 பார்சலும் இருந்துள்ளது. அப்பையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், தொடர்ந்து யாரும் பிரியாணிக்கு உரிமை கோர வராததால் அப்பார்சல்களை குப்பையில் வீசி எறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு பீதி அகன்று விமான நிலையத்தில் அதிகாரிகளும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Click it and Unblock the Notifications
