இன்று முதல் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து... தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த என்ஜினீயரிங் மற்றும் சட்டத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. .மழையின் காரணமாக இன்று முதல் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இன்று முதல் வரும் 18-ந்தேதி வரை அண்ணாபல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தேர்வுகள்
அதேபோல, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வணங்காமுடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து சட்ட கல்லூரிகளில் இன்று முதல் வரும் 18-ந்தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் கூறுகையில் இன்று, சென்னை பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
மருத்துவம்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் இன்றும், நாளையும் நடைபெறவிருக்கும் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை செய்முறை தேர்வுகள் ரத்துசெய்யப்படுகின்றன. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications