சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி கிடையாது… உணர்த்திய வைகோ
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலன் கூட்டியக்கத்தினர் ஆட்சி அமையும் என்று வைகோ கூறியுள்ளதால் திமுக உடன் மதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார்.
பாஜக காங்கிரஸ் கட்சிக்கு மாற்று தி.மு.க., அ.தி.மு.க. அல்ல. மக்கள் நலன் கூட்டு இயக்கத்தின் போராட்டங்கள்தான் என்று உறுதியாகவும் இறுதியாவும் கூறப்பட்டுள்ளதால் சட்டசபை தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட்டுகள் திமுக உடன் கூட்டணியில் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது 53வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கூட்டணி ஆட்சி கொள்கை மாநாடு சென்னையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதற்காக தமிழக தலைமைச் செயலகம் போன்ற தோற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இணைந்த கைகள்
மாநட்டில் பேசிய 5 தலைவர்களுமே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். அனைவரும் கரங்களை ஒன்றாக இணைந்து நின்று இது உடையாத கூட்டணி என்று போஸ் கொடுத்தனர்.

மக்கள் நலன் கூட்டியக்கம்
மேடையில் பேசிய வைகோ, கூட்டணி ஆட்சி என்ற கொள்கைக்கு அகரம் அமைத்தவர் தொல்.திருமாவளவன். தற்போது மக்கள் நலன் கூட்டியக்கத்தை சார்ந்த 5 கட்சிகளை பார்த்து சிலர் அச்சப்படுகின்றனர் என்றார்.

கூட்டணி ஆட்சி
கூட்டணி ஆட்சி என்று முடிவு எடுத்த பிறகு, யார் தலைமையில் ஆட்சி என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஒரே பதில், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலன் கூட்டியக்கத்தினர் ஆட்சி என்பதுதான்.

இடம் கொடுக்க மாட்டோம்
காந்தியவாதி சசிபெருமாள் இறந்த போது அவர் உடலைப் பெற்றது தொடங்கி அடக்கம் செய்தது வரை பல்வேறு போராட்டங்களை 5 கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். ஆனால் சிலர் திடீரென வந்து தாங்கள்தான் ஏதோ செய்தது போல காட்டிக்கொள்ள முயற்சித்தனர். அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை.

திமுக கூட்டணியில்
சட்டசபை தேர்தல் கூட்டணி விஷயத்திலும் இடம் கொடுக்க மாட்டோம் என்று ஆணித்தரமாக முடித்தார். இதன்மூலம் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறாது என்பதை வெளிப்படையாகவே உணர்த்தியுள்ளார் வைகோ. திருப்பூர் மாநாட்டில் இதனை உறுதியாக தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ஜி.ராமகிருஷ்ணன்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று முடிவு எடுத்துள்ளோம். இந்த முடிவுக்கு பிறகு யார் தலைமையில் ஆட்சி என்பதையும் முடிவு செய்து விட வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளோடு நாம் கூட்டணி அமைக்க முடியாது. பாஜக காங்கிரஸ் கட்சிக்கு மாற்று தி.மு.க., அ.தி.மு.க. அல்ல. மக்கள் நலன் கூட்டு இயக்கத்தின் போராட்டங்கள்தான் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன்.

திருமாவளவன்
கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதை மையமாக வைத்து கூட்டணி ஆட்சிக் கொள்கை மாநாடாக இந்த பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி மலர வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் தொல் திருமாவளவன்.

அதிகார பகிர்வு
1952 முதல் இன்று வரை 3 கட்சிகள்தான் தமிழகத்தை ஆண்டிருக்கின்றன. அந்த 3 கட்சிகள் பின்னாடியே மற்ற கட்சிகள் செல்லுகிற அவலம் உள்ளது.
எனவே வாக்குகளுக்காக மட்டுமே கூட்டணி என்ற நிலைக்கு பதிலாக அதிகார பகிர்வுக்கான ஏற்பாடாக கூட்டணி முறை அமைய வேண்டும். சாதிய மற்றும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும் என்றார்.

அப்போ அதுவும் போச்சா
சட்டசபை தேர்தலில் எதிர்கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து தங்களின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கவேண்டும் என்று திமுக கணக்கு போட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நலன் கூட்டு இயக்கத்தினர் தங்களின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முழக்கத்தை முன்வைத்துள்ளதால் "அப்போ சோனாமுத்தா போச்சா" என்பது திமுகவின் மைன்ட் வாய்ஸ் ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications