கமலாலயத்தில் வைகோ... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து ஆலோசனை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதைக்கு தமிழக பாஜக கூட்டணியில் முடிவாகியுள்ள பாஜகவும், மதிமுகவும் மேலும் நெருக்கமாகியுள்ளன. பாஜக தலைவர்கள் மதிமுக தலைமைக் கழகத்திற்குப் போய் பேசிய நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்திற்கு வைகோ வருகை தந்தார்.
இன்று கமலாலயம் வந்த வைகோவுக்கு பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளித்தனர். வைகோவுடன், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாசிலாமணி, தேவதாஸ், குமரி விஜயகுமார், செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

இதையடுத்து கூட்டணி குறித்தும், நரேந்திர மோடியின் சென்னை வண்டலூர் பொதுக் கூட்டம் குறித்தும் பாஜக தலைவர்களும், வைகோவும் ஆலோசனை நடத்தினர். பாஜக தரப்பில் இல.கணேசன், கே.என். லட்சுமணன், மோகன் ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
சந்திப்புக்குப் பின்னர், பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வைகோ ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது வைகோ கூறுகையில், வருகிற பிப்ரவரி 8-ந்தேதி வண்டலூரில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் தொடர்பாக ஆலோசித்தோம். கடந்த 1998, 1999-ம் ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோம்.
2004-ம் ஆண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டணியில் இருந்து விலகினோம். ஆனாலும் குறிப்பிட்ட ஒரு கட்சியால் கமலாலயம் தாக்கப்பட்டபோது எங்கள் ம.தி.ம.க. தொண்டர்கள் கமலாலயத்திற்கு வந்து பா.ஜ.க நிர்வாகிகளுடன் பேசினார்கள்.
அந்த அளவு எங்களுக்குள் தொடர்பு இருக்கிறது. நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தை மிகப்பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த கோரியிருக்கிறோம்.
எங்கள் கட்சி சார்பில் ஐவர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனது அரசியல் அனுபவத்தின்படி சொல்கிறேன். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. திருச்சியில் நடைபெற்ற கூட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதைவிட அதிகமாக வண்டலூர் கூட்டம் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள், அரசியலை சாராதவர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி பலரது கணக்குகளை முறியடித்து மாபெரும் வெற்றி பெறும். நிச்சயமாக பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றார்












Click it and Unblock the Notifications