திருப்பரங்குன்றம்: போராட்டம் நடத்தகூட நீதிமன்றம் செல்லும் நிலைதான் எதிர்க்கட்சிகளுக்கு- வானதி ஆவேசம்
கோவை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தமிழக எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது என்றும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் மக்கள் சேவை மையம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்று மாணவிகள் மத்தியில் பேசினார். முன்னதாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் வைத்தவாறு பேரணியாக நடந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: நாம் பயன்படுத்தக்கூடிய கார்பனுக்கு சமமாக மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும். நாம் பயன்படுத்த கூடிய கார்பன் அளவை குறைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தனியார் கல்லூரியுடன் இணைந்து நடத்தி வருகிறோம். 7 ஆயிரம் மாணவிகள் தினமும் ஒரு மணி நேரம் செல்போனை அணைத்து வைத்து விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர்.
தமிழக அரசைப் பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. குண்டாஸ் போடும் அளவிற்கு அரசு உள்ளது. மோடியை விமர்சிக்காத ஊடகம் இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில்கூட நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தமிழக எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. நீதிமன்றம் சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்ப உள்ளார்கள். காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஈரோடு களத்தில் ஒற்றை ஆளாக திமுக நிற்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாத போதும் மக்களை அடைத்து வைத்து தான் வருகின்றனர். மக்கள் வழங்கும் வாக்குகளை பார்க்கலாம். யார் அந்த சார்?? என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்மை வெளியிட்டால், அது தமிழக அரசுக்கு தலைகுனிவு.
வளர்ச்சியையும், சுற்றுப்புறச் சூழலையும் ஒருசேர கையாள வேண்டும். மாநில அரசுக்கு தேவையான உதவியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க உறுதுணையாக இருப்போம். கோவை மெட்ரோ பணிகள் மெதுவாக துவங்கி வருகிறது. விடாமுயற்சி திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பார்ப்பேன். நல்ல படம் என்றால் நிச்சயமாக சென்று பார்ப்பேன். நல்ல படம் என்று சொல்லுங்கள் நான் சென்று பார்க்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் நியமனத்தில் சாதி, பணம் போன்றவை பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, முதல்கட்ட நடவடிக்கையிலேயே இவ்வளவு குளறுபடிகள் என்றால் ஒரு அரசியல் இயக்கம் எவ்வாறு அடுத்த பரிணாமத்தை அடையும் என்பது கேள்விக் குறியாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications