ஆர்ப்பரித்த "சிறுத்தைகள்"... டென்ஷன் ஆன "புரட்சிப் புயல்"!
சென்னை: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து எல்லோருக்கும் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது உண்மைதான். பரவாயில்லையே, தேமுதிகவுக்கு இன்னும் கிரேஸ் இருக்கிறதே என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் வந்த கூட்டத்தில் பெரும்பாலனோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் என்பதுதான் கூட்டணித் தலைவர்கள் சிலருக்கே ஜீரணிக்க முடியாத உண்மையாகிப் போனது.
திருமாவளவன் பெயரைச் சொன்னபோதெல்லாம் கூட்டத்தில் எழுந்த கைத்தட்டல்களும், முழக்கங்களும் மாமண்டூரையே அதிர வைத்தன. ஆனால் இதை சில தலைவர்கள் குறிப்பாக வைகோ ரசிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே அனைவரும் காண முடிந்தது.
தான் பேச வந்தபோது இதை வெளிப்படையாகவே சொல்லியும் காட்டினார் வைகோ.

மாமண்டூர் மாநாடு
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு சென்னையை அடுத்த மாமண்டூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகிய 6 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

குவிந்த கூட்டம்
இந்த மாநாட்டிற்கு பெருமளவில் தொண்டர்கள் குவிந்தனர். மாநாடு நடந்த மைதானமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. ஆறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அலை கடலெலன திரண்டு வந்திருந்தனர். ஆனால், பெண்கள் கூட்டம் மிக மிகக் குறைவு.

மாஸ் காட்டிய திருமாவளவன்
இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் என்பதையும் அறிய முடிந்தது. அந்த வகையில் திருமாவளவன் முகத்தில் உற்சாகம் பொங்கிப் பெருக்கெடுத்தைக் காண முடிந்தது.

பெயர் சொன்னபோதெல்லாம்
கூட்டத்தில் பேசியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் பெயரைச் சொன்னபோதும், திருமாவளவன் பெயரைச் சொன்னபோதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. மற்ற தலைவர்களுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு இல்லை. இதைப் பார்த்து தலைவர்களுக்கே சற்று திகைப்புதான்.

டென்ஷன் ஆன வைகோ
மற்ற தலைவர்கள் இதை மனதுக்குள் பொறுத்துக் கொண்டனர். ஆனால் வைகோ தனது பேச்சில் வெளிப்படையாகவே அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் காட்டினார்.

அதட்டினார்.. பாராட்டினார்
தான் பேச வந்தபோது திடீரென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அவர் அதட்டத் தொடங்கினார். உங்களால் திருமாவளவனுக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றெல்லாம் கூறினார். பின்னர் திடீரென பாராட்டினார்.

நம்ம தம்பிகள்தான் .. சொன்னா கேட்டுக்குவாங்க
நம்ம தம்பிகள்தான் சொன்னா கேட்டுக்குவாங்க என்று விடுதலைச் சிறுத்தையினரை ஐஸ் வைப்பது போலவும் வைகோ பேசினார். இதை சரியாக புரிந்து கொண்ட திருமாவும். சிரித்து வைத்தார்.

அமைதியாக விஜயகாந்த்
மறுபக்கம் விஜயகாந்த், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விடுதலைச் சிறுத்தைகள் கொடி அதிகமாக காணப்பட்டதையும், திருமா பெயரைச் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்ததையும் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
மொத்தத்தில் திருமாவளவன் தனது தொண்டர் பலத்தை நேற்று மாமண்டூரில் வைத்துக் காட்டி விட்டார் என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications