தமிழகத்தில் கன்னட வங்கிகள், நிறுவனங்கள் முன் முற்றுகை போராட்டம்: வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் உள்ள கர்நாடகா அரசு வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் கன்னட தொழில்நிறுவனங்கள் முன்பாக ஜனநாயக வழியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்துமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு 15,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டது. ஆனால் இந்த நீர் சம்பா சாகுபடிக்கு போதுமானது அல்ல என்பதால் கூடுதல் நீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை தராமல் கர்நாடகா இழுத்தடித்ததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இதனால்தான் உச்சநீதிமன்றத்துக்கு தமிழகம் செல்லவும் நேரிட்டது.

தொடர் போராட்டம்
இப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் காவிரியில் 6 நாட்களுக்குதான் நீர் தர முடியும்; இந்த நீரே சம்பா சாகுபடிக்கு போதும் என வியாக்யானம் பேசுகிறது கர்நாடகா. அதே நேரத்தில் கன்னட அமைப்புகளோ உச்சநீதிமன்றதிதின் தீர்ப்பை மதித்து எப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கலாம் என போராட்டம் நடத்தி வருகின்றன.

இழிவுபடுத்துவதா?
கடந்த ஒரு வாரகாலமாக தமிழக வாகனங்கள் மீதும் தமிழர் சொத்துகள் மீதும் கன்னடவெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இதை அந்த மாநில அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. கன்னட திரை உலகினரும் தமிழக முதல்வர் அவர்களையும் தமிழர்களையும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர்.

பகிரங்க மன்னிப்பு கேட்கவும்
கன்னட வெறியர்களோ, தமிழக முதல்வர் அவர்களின் உருவபொம்மையை கேவலமாக சித்தரித்து எரித்திருக்கின்றனர். இதன் உச்சமாக தமிழக இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட காரணத்தாலேயே அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார். இந்த அக்கிரம அடாவடி செயல்களுக்கு கர்நாடகா முதல்வரும், கன்னட அமைப்பினரும் கன்னட திரைத்துறையினரும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

எதிர்வினை நிகழும்...
அப்படி பகிரங்க மன்னிப்புக் கேட்காத நிலையில் தமிழகத்திலும் அதே போன்ற ஒரு எதிர்வினைதான் நிகழும் என எச்சரிக்கிறேன்.

மத்திய அரசுக்கும் எதிராக...
அதே நேரத்தில் கர்நாடாகவை மத்திய அரசு கண்டிக்காமல் கண்டுகாணாமல் இருந்தால் எங்களது போராட்டம் மத்திய அரசுக்கு எதிராகவும் வெடிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக வழி முற்றுகைப் போராட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து கர்நாடகா அரசு வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோழர்கள் ஜனநாயக வழியில் முற்றுகைப் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழர் நலன் சார்ந்த தமிழர் அமைப்புகளும் இந்த போராட்டத்தில் இணைந்து தமிழர் தம் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications