For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம்கள் படுகொலை - மத்திய அரசு தலையிட தி.வேல்முருகன் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தி. வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்துள்ளது. இந்த பெருந்துயரத்துக்கு நீதி கிடைக்க தமிழ்ச் சமூகம் அத்தனை வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறது.

Velmurugan condemned Srilanka on Muslims killing

இந்த நிலையில் மற்றும் ஒரு பேரிடியாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து சிங்களப் பேரினவாத காடையர்கள் கொடுந்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இலங்கையின் அளுத்கம, பேருவளை பகுதிகளில் பவுத்த பிக்குகளின் கட்சியான பொதுபல சேனாவினர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசி தமிழ் பேசும் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் சூறையாடப்பட இலங்கை அரசும் அதன் படைகளும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் உறவுகள் படுகாயமடைந்துள்ளதுடன் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டும் இருக்கின்றனர்.

2009ஆம் ஆண்டு தமிழின அழிப்புக்கு எப்படி 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் அடிப்படையாக இருந்ததோ அதைப் போன்ற ஒரு நிலைமை இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை வேட்டையாடியதைப் போலவே தமிழ் பேசும் முஸ்லிம் உறவுகளை வேட்டையாட சிங்களம் தீர்மானித்துவிட்டது என்பதையே அளுத்கம படுகொலைகள் வெளிப்படுத்துகின்றன. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த படுகொலை சம்பவங்களுக்கு உலக நாடுகள் துடிதுடித்து கண்டனம் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் கனடாவும் கண்ணீர்விடுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் காட்டமாக ராஜபக்சே அரசை எச்சரிக்கிறது.

ஆனால் நமது தாய்நாடான இந்தியாவோ கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த ஒரு கண்டனத்தையுமே பதிவு செய்யாமல் இருக்கிறது இந்திய அரசு. எங்கோ ஈராக்கில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற இந்திய அரசால், இந்த நாட்டின் தொப்புள் கொடி உறவுகள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது பற்றி கவலைப்பட முடியாமல் இருப்பது வேதனை தருகிறது.

இலங்கையில் சிறுபான்மை மக்களை வேரோடு வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு பொதுபல சேனா போன்ற இனவெறி அமைப்புகளை இனப்படுகொலையாளன் ராஜபக்சே தூண்டி விடுகிறான். இதை இந்தியா தொடர்ந்தும் அனுமதிக்கக் கூடாது; அமைதியாகவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

இந்திய அரசு உடனே இதில் தலையிட்டு, இனப்படுகொலையாளன் ராஜபக்சே அரசுக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்து தமிழ் பேசும் அத்தனை மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கண்டிப்புடன் கூற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

அத்துடன் இதுநாள் வரை ஏதோ ஏதோ காரணங்களால் பிரிந்து கிடந்த இலங்கை வாழ் தமிழ் பேசும் உறவுகள் அனைத்தும் இனியேனும் நமது கரங்களை கைகோர்த்து சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக, தமிழர் தம் அரசியல் விடுதலையை வென்றெடுக்க, சுதந்திரத் தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அன்புடன் வேண்டுகிறது.

இவ்வாறு தி.வேல்முருகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Thamizhaga Vazhvurimai Katchi leader T. Velmurugan has condemned the attack on Srilankan Muslims and he said that the attacks on Muslims showed that the Sri Lankan government was against the interests of the minorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X