டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்த "வீரமிகு" வேப்பேரி இன்ஸ்பெக்டர் 'டிரான்ஸ்பர்'!
சென்னை: வயது முதிர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் போய் கைது செய்து பரபரப்பை உண்டாக்கிய சென்னை வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் டாக்டர் அழகப்பா சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு சாலையில் நின்றவாறு டிராபிக் ராமசாமி பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனைத் தட்டிக் கேட்ட தன்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி மீது வேப்பேரி போலீசில் வீரமணி என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த வியாழனன்று அதிகாலை டிராபிக் ராமசாமியை வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு கைது செய்தார். பின்னர், கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று டிராபிக் ராமசாமிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், டிராபிக் ராமசாமியைக் கைது செய்து பரபரப்பை உண்டாக்கிய வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications