"லெப்ட்"டில் சிக்னல் போட்டு விட்டு "ரைட்"டில் போகும் விஜயதாரணி.. பொன். ராதாவையும் சந்தித்தார்!
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்துள்ள விஜயதாரணி என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிப்பதாக தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய அவர் தற்போது பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் விஜயதாரணி. எம்.எல்.ஏவான இவருக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை.
அதுவும் குஷ்பு கட்சியில் வந்து சேர்ந்தது முதல் இளங்கோவன் - விஜயதாரணி மோதல் மேலும் வெடித்தது, வலுத்தது. உச்சக்கட்டமாக இரு தரப்பும் போலீஸ் வரை போய் விட்டது.

பதவி பறிப்பு
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை வரவழைத்து துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் விஜயதாரணியிடமிருந்து கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டது.

ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்தார் விஜயதாரணி. தனது பதவி பறிப்பு அநீதியானது என்று அறிக்கை விட்டார். பேட்டி கொடுத்தார்.

ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு
இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் வைத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். மனு ஒன்றையும் கொடுத்தார். மேலும், தனியாக சந்தித்துப் பேச அனுமதி தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதிமுகவில் சேருவாரா?
இதனால் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி அதிமுகவில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா தரப்பிலிருந்து இதுவரை எந்த ரியாக்ஷனும் இல்லை.

பொன். ராதாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் திடீரென அப்படியே யு டர்ன் போட்டு காங்கிரஸுக்கு முற்றிலும் நேர் மாறான பாஜக பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார் விஜயதாரணி. சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, விஜயதாரணி, தன் ஆதரவாளர்களுடன், நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார்.

பாஜகவில் சேருவாரா?
பொன். ராதாகிருஷ்ணனை ஏன் சந்தித்துப் பேசினார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை பொன். ராதாவும், தனது மாவட்டத்தைச் சேர்ந்தவர் (கன்னியாகுமரி) என்பதால் தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பாக பேசியதாக நாளை விஜயதாரணி கூறக் கூடும். அதேசமயம், பாஜகவில் சேரவும் அவர் முயற்சிப்பதாக கருதப்படுகிறது.

எது கிடைத்தாலும் சரித்தான்
அதிமுகவில் சேர அனுமதி கிடைத்தாலும் சரி, இல்லை பாஜகவில் சேர வாய்ப்பு கிடைத்தாலும் சரி, எது கிடைத்தாலும் எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவில் விஜயதாரணி இருப்பதாக கூறப்படுகிறது.
அதுதானே.. கொள்கையாவது, வெங்காயமாவது!












Click it and Unblock the Notifications