திமுகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை: மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் ஆவேசம்!
சென்னை: தேமுதிகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, பலவீனப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதற்கு கட்சியினரே உடந்தையாக இருக்கக் கூடாது. தேமுதிகவில் உள்ள அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை நிரூபித்துக் காட்டுவோம் என்று விஜயகாந்த் தனது கட்சி மாவட்ட செயலாளர்களிடம் உருகியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. அதன் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் டெபாசிட் இழந்தார். இந்த நிலையில் தமது கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்து கேட்டு வருகிறார் விஜயகாந்த்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது தொடர்பாக, மாவட்டச் செயலர்களுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். திமுக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பலர் பேசவே கோபப்பட்ட விஜயகாந்த், ஒருபோதும் திமுக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஆவேசமாக கூறியுள்ளாராம்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிக தொழிற்சங்கப் பேரவையின் 11ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை கட்சியின் கொடியை ஏற்றினார். இதையடுத்து, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்களிடம் கருத்துகளை விஜயகாந்த் கேட்டறிந்தார்.

விஜயகாந்த் உருக்கம்
கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் சற்றே உருக்கமாகவே பேசினாராம். தேமுதிகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, பலவீனப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதற்கு கட்சியினரே உடந்தையாக இருக்கக் கூடாது. தேமுதிகவில் உள்ள அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறினாராம்.

கோபப்பட்ட விஜயகாந்த்
தேர்தலால் பல லட்சங்களில் கடன் சுமை ஏறிவிட்டது. வட்டி கட்டமுடியவில்லை. மிகவும் நொடிந்து இருக்கிறோம் என்று பலர் தெரிவித்தனர். அதை கூர்ந்து கவனித்தவர் தொடர்ந்து அதேபோல கருத்துக்கள் வந்தபோது கோபத்தில் எழுந்து அருகில் இருந்த அறைக்கு சென்றார். பின் கோபம் தணிந்தபின் மீண்டும் கூட்டத்தில் இணைந்துகொண்டார்.

எப்போதும் கூட்டணியில்லை
திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இந்தளவு தோல்வியடைந்திருக்க மாட்டோம். பணமும் பெரியளவில் செலவாகியிருக்காது' என்றபோது மீண்டும் கோபமடைந்தவர் , ‘என்ன எப்போ பார்த்தாலும் திமுகவுடன் கூட்டணி வைக்காதது தவறென்றே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இப்போ சொல்றேன் இனி எப்போதும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறினாராம் விஜயகாந்த்.

விழுப்புரம் நிர்வாகிகள்
விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ஒருவர் கருத்து சொல்ல முயன்றபோது, கோபமாக எழுந்த விஜயகாந்த் , விழுப்புரம் மாவட்டத்திலிருந்து யாரும் பேசவேண்டாம் உங்களை யார் ஆட்டி வைக்கிறாங்க என்று எனக்கு தெரியும் என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டாராம். மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசனை குறிபிட்டு தான் மறைமுகமாக அப்படி சொன்னாராம்.

யாருடன் கூட்டணி
இதுவரை ஐந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. பேசசொல்கிறார், பேசினால் பயங்கரமா நோஸ் கட்பன்றார், சம்பந்தமே இல்லாமல் இனி திமுக,வுடன் கூட்டணியும் இல்லை உறவும் இல்லை என்று பேசுகிறார், அப்படியென்றால் ‘அதிமுக,வுடன் கூட்டணியா?' என்று கேட்கின்றனராம்.

உள்ளாட்சி தேர்தல்
இதற்கிடையே மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் எழுந்து கேப்ட்டன் கருத்தை சொன்னார், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு தலைமையில் யாரும் ஒரு பைசாகூட எதிர்பார்ககூடாது, உங்கள் சொந்த பணத்தில்தான் செலவு செய்யவேண்டும், கட்சி தலைமையிடம் பணம் இல்லை. இது கேப்டன் விஜயகாந்தின் கருத்து' என்றார். நையா பைசா இல்லாத நாங்கள் இனி எங்கிருந்து பணத்தை செலவு செய்வது?' என்றார் நொந்தபடி. இந்த குமுறல் பலரிடமும் வெளிப்பட்டன.

14 மாவட்ட செயலாளர்கள்
இந்நிலையில் ஜூன் 28 இன்று தலைமைக்கு கடிதம் எழுதபட்டதாக சொல்லபட்ட 14 மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, தலைமைக்கு வந்த கடிதத்தை பற்றி தீவிரமாக விவாதித்துள்ளது தேமுதிக தலைமை. கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் ‘நாங்கள் எழுதவில்லை. எழுதியிருந்தால் நாங்கள் உங்கள் முன்னாள் வந்து நிற்க முடியுமா?' என்று கூறினார்களாம்.

வி.சி.சந்திரகுமார் மீது புகார்
அந்த 500 கோடி ரூபாய் கடிதம் எழுதியவர்கள் மீது புகார் கொடுக்க உத்தரவிட்டாராம் விஜயகாந்த். தேமுதிக தலைமைச் செயலர் பார்த்தசாரதி தலைமையிலான நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று, டிஜிபி திரிபாதியைச் சந்தித்து சந்திரகுமார் கோஷ்டிக்கு எதிராக புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

விஜயகாந்த் பெயருக்கு களங்கம்
அந்த மனுவில் தேமுதிகவின் 14 மாவட்டச் செயலர்களின் பெயர்களைப் போட்டு, தேமுதிகவுக்கும், விஜயகாந்த் பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் யாருடைய கையெழுத்தும் இல்லை. அனுப்பியவர்கள் விலாசமாக தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், வி.யுவராஜ், எம்.செளந்திரபாண்டியன் ஆகியோரின் பெயர்களும், தொலைபேசி எண்களும் உள்ளன.

தேமுதிகவினருக்கு மன உளைச்சல்
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது உண்மைக்கு மாறான செய்தி ஆகும். இதனால் விஜயகாந்துக்கும், தேமுதிகவினருக்கும் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தக் கடிதத்தை அனுப்பியவர்கள் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ. 500 கோடி
தேமுதிக அறக்கட்டளையில் மாவட்டச் செயலர்கள் கொடுத்த பணம் ரூ.500 கோடி வரை இருப்பதாகவும், அதில் விஜயகாந்த்தின் குடும்பத்தினரே உறுப்பினராக இருப்பதாகவும் கடிதம் வெளியான கடிதத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications