துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய டெண்டர் விட்டதால் விலை உயர்வு: விஜயகாந்த்
சென்னை: மக்களை பாடாய்ப் படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் அதிகளவு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியதும் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான, உணவுப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில், விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால் அதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தத்
தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை. பொதுவாகவே உணவுப்பொருட்கள் அறுவடை காலங்களில் விலை குறைவாகவும், அதன்பின் சற்று விலை உயர்ந்து காணப்படுவதும் வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது பருப்பு, எண்ணெய், புளி,
மிளகாய், அரிசி, காய் கறிகள் என அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, 180 ரூபாய்
என்ற அளவில் உயர்ந்து, தற்போது 210 ரூபாய் என்ற அளவிற்கு விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. இதுபோலத்தான் அனைத்து உணவுப்பொருட்களும் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பல வீடுகளில் பட்ஜெட் போட்டு வாழும் மாத வருமானத்தினர் ஒருவேளை உணவு சாப்பிடுவதையே நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 70 ரூபாய்க்கு விற்ற எண்ணெய் வகைகள் ரூபாய் 150க்கும், 50 ரூபாய்க்கு விற்ற மிளகாய் ரூபாய்
140க்கும், 10 ரூபாய்க்கு விற்ற காய்கறிகள் கூட 50 ரூபாய் என்ற அளவிற்கு விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வரும் நிலையில் இந்த விலை உயர்வு
பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. அதனால் ஏழை, நடுத்தர மக்கள் என்ன செய்வதென தெரியாமல் விழிபிதுங்கிப்போய் உள்ளனர். இந்த விலைவாசி உயர்விற்கு மிகமுக்கிய காரணமாக கூறப்படுவது, ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் உணவுப்பொருட்களை ஒட்டுமொத்தமாக பதுக்கிவைப்பதே இதற்கு காரணமென வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழக அரசு ஒரே சமயத்தில் திடீரென அதிக அளவு துவரம் பருப்பையும், உளுத்தம்பருப்பையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியதும் விலை உயர்விற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே
உடனடியாக இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயாகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications