என்ன இப்படி சொல்லிட்டாரே? உதயநிதியை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட விஜயகாந்த் மகன்! திமுக கொந்தளிப்பு
செங்கல்பட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, ஒசாமா பின்லேடன் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு அவரது பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதன்பிறகு அவர் மேடையில் பேசினார். அப்போது திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த வேளையில் அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையை தீவிரவாதி ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசி பரபரப்பை கிளப்பினார்.
இதுதொடர்பாக விஜய பிரபாகரன் மேடையில் பேசியதாவது: இன்று திமுகவினர் அனைவரும் சந்தோஷமாக இருப்பதாக கூறுகின்றனார். ஏனென்றால் அண்ணன் உதயநிதி ஸ்டாலினை உலகம் முழுவதும், இந்தியா முழுவதும் பேசுவதாக கூறுகின்றனர். சூப்பர், சந்தோஷம். அண்ணன் உதயநிதி வளரட்டும். இந்தியா முழுவதும் தெரியட்டும்.
ஆனால் நல்ல வழியில் தெரிய வேண்டும். மக்களுக்கு நல்லது செய்து தெரிய வேண்டும். ஒரு அப்துல் கலாமாகவும், அம்பேத்கராகவும் தெரியட்டும். ஆனால் ஒசாமா பின்லேடனாகவும், ஒரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியாகவுமாக தெரிகிறீர்கள்'' என கூறினார்.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது டெங்கு, கொரோனா உள்ளிட்டவற்றை எதிர்க்க முடியாது. அழிக்க தான் வேண்டும். அதேபால் தான் சனாதனமும் என கூறியிருந்தார். இந்த கருத்து இந்தியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி முதல் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட பல தலைவர்கள் கடுமையாக உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனால் உதயநிதி ஸ்டாலினின் பெயர் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) வலைதளத்தில் டிரெண்டாகி இருந்தது. இத்தகைய சூழலில் தான் இப்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசியது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த பேச்சால் திமுகவினர் கொந்தளித்துள்ளனர். அதோடு விஜய பிரபாகரனுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications