அக்னி வெயில் முடிந்து சட்டென மாறுது வானிலை.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. அலெர்ட்!
சென்னை : கத்தரி வெயிலின் தாக்கம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மக்கள் வெளியே கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். கத்தரி வெயில் முடிந்துவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே பள்ளிகள் திறப்பு ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது.
திருப்பூர், கோவை, தூத்துக்குடி, தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர் என பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், திருநின்றவூர், சோழவரம் ஆகிய பகுதிகளிலும் புழுதிக் காற்று சுழன்றடித்தது. மாலை வேளையில் இருள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் ஓரளவுக்கு தணிந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கார்மேகங்களால், மாலை விரைவாகவே இருள் சூழ்ந்தது. மழை பெய்யாத நிலையிலும் குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் ஓரளவுக்குத் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications