நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு தப்புமா? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பிறகும் ட்விஸ்ட்
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தபோதிலும் தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த நிலையில் தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல்களால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த ஆட்சி தப்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். எனினும் பதில் வராததால் அவர்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
எடப்பாடி தரப்பினரும், தினகரன் தரப்பினரும் பல்வேறு வழக்குகளை முன்னுதாரணமாக கொண்டு இந்த அறிவிப்பு செல்லும் என்றும் செல்லாது என்றும் கூறி வருகின்றனர்.

எடப்பாடி கணக்கு
தமிழக சட்டசபையில் அதிமுகவில் 133 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததால் அந்த எண்ணிக்கை 115-ஆகியுள்ளது. மேற்கண்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாக உள்ளநிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையை நிரூபிக்க வெறும் 108 எம்எல்ஏக்களே தேவைப்படுவர். ஆனால் எடப்பாடியிடம் இருப்பதோ 115.
Recommended Video


அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள்
அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அரசின் தகுதி நீக்க நடவடிக்கையால் அதிருப்தியில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் எடப்பாடிக்கு 112 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறலாம் என்று வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஸ்லீப்பர் செல்கள்
எடப்பாடி அணியில் தங்கள் அணியை சேர்ந்த ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என தினகரனும் அவரது எம்எல்ஏக்களும் கூறி வந்தனர். தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகும், எடப்பாடியின் கணக்கு தப்பாகும். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவார் என்கிறார் தினகரன்.

இது எப்படி?
தினகரன் அணியில் இருந்து அணி மாறிய ஜக்கையனும் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் என தங்கதமிழ் செல்வன் கூறியிருந்தார். இந்நிலையில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் எடப்பாடி அணியில் எங்களுக்கு 12 ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பர் என்றார்.

தப்புமா?
தினகரன் கூறுவதை பார்க்கும் போது எடப்பாடி தனக்கு அணியில் இருப்பதாக கூறப்படும் 112 எம்எல்ஏக்களில் (கூட்டணி எம்எல்ஏக்கள் தவிர்த்து) 12 பேர் ஸ்லீப்பர் செல்கள் என்றால் வெறும் 100 எம்எல்ஏக்கள் ஆதரவு என்ற நிலை ஏற்பட்டால் அரசு தப்பாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற குறைந்தது 108 எம்எல்ஏக்கள் பலம் தேவை. தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது பொய்யா? மெய்யா? என்பது நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications