மயிலாடுதுறை மோனிகா.. தாயிடம் போனில் சொன்ன வார்த்தை.. ஆடிப்போக வைத்த அடுத்த அழைப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் மாந்தோப்புத்தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடைய மனைவி மோனிகா. ஹரிகிருஷ்ணன் மோனிகா தம்பதி, கடந்த 2021ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியது தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. இறுதியில் நடந்த விஷயம் மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது.
கணவன் மனைவி இடையே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை இருவரும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலமே சரி செய்ய முடியும். ஒருவர் இன்னொருவரை தனக்கு அடிமையாகவோ, தான் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்காமல் ஈகோ காரணமாக தவறான முடிவெடுப்பது அதிகரிக்கிறது. சில குடும்பங்களில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டையில் கணவனின் தவறான செயல்களும் காரணமாக இருக்கிறது. அதேபோல் சில நேரங்களில் பெண்களும் அவசரப்பட்டு முடிவெடுக்கிறார்கள். மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் மாந்தோப்புத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் ஹரிகிருஷ்ணனுக்கு 27 வயது ஆகிறது. இவரும் திருவிடைமருதூர் தாலுகா வேப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகளான 25 வயதாகும் மோனிகாவை கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு மித்ரன் (3) என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியது தொடர்பாக குடும்பத்தில் சண்டை நடந்ததாக மோனிகா தனது தாயார் கஸ்தூரியிடம் போனில் கூறினாராம்.. அதன்பிறகு மோனிகா வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக கணவர் வீட்டார் போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோனிகாவின் தாயார் கஸ்தூரி மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவருடைய கணவன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் அடிக்கடி சண்டை போட்டதால் தனது மகள் இப்படி செய்துகொண்டாரா? என்று சந்தேகம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மோனிகாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவருடைய முடிவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே மோனிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மோனிகாவின் இந்த முடிவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. போராட்டத்தால் மயிலாடுதுறையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications