நடிகர் மனோபாலா போட்ட கடைசி ட்வீட் இதுதான்.. தீயாக பரவும் ட்வீட்.. நெட்டிசன்கள் இரங்கல்
சென்னை: தமிழ் சினிமாவில் பல முகங்களைக் கொண்ட மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கிடையே அவர் ட்விட்டரில் பதிவிட்ட கடைசி படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் மனோபாலா. இந்த காலத்து சினிமா ரசிகர்களுக்கு இவரை நடிகராக மட்டுமே தெரியும் ஆனால், சுமார் 40 படங்களை இயக்கி உள்ளார்.
மேலும், 16 டிவி தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.. பல முகங்களைக் கொண்ட மனோபாலா, தயாரிப்பாளர், இயக்குநர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பல முகங்களைக் கொண்டவர். குறிப்பாக காமெடி நடிகராக இவர் தமிழ் சினிமாவை நீண்ட காலம் கலக்கி வந்தார். 69 வயதான மனோபாலா இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் பல கேரக்டர்களில் நடித்துள்ளார்.

மனோபாலா: இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியிக்குநராக இருந்த மனோபாலா, ஆகாய கங்கை, பிள்ளை நிலா எனப் பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். 1994ஆம் ஆண்டு தாய்மாமன் என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பின்னர் பல நூறு படங்களில் நடித்துள்ளார். இப்படி படுபிஸியாக நடித்து வந்த மனோபாலா இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென காலமானார். மனோபாலா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக அவருக்குக் கல்லீரல் பிரச்சனை இருந்த நிலையில், இதற்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இன்று நெஞ்சு வலி அதிகம் ஆகவே அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனோபாலா சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த மனோபாலா, கடந்த சில வாரங்களாக எந்தவொரு போஸ்டையும் போடவில்லை. இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி கடைசியாக ட்விட்டரில் ஒரு படத்தைப் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் எந்தவொரு படத்தையும் பதிவிடவில்லை. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் காலமானார்.
கடைசியாகப் பதிவிட்ட படம்: மனோபாலா உயிரிழந்துள்ள நிலையில், அவர் கடைசியாகப் பதிவிட்ட படம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் சிவப்பு நிற டி சர்ட் போட்டிருக்கும் மனோபாலா சாமியார் ஒருவரது படத்துடன் நிற்கிறார். இந்தப் படம் இப்போது ட்விட்டரில் டிரெண்டாகும் நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதேபோல இயக்குநர் பாரதிராஜா,
"என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இப்போது நடிகர் மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் மனோபாலாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications