மு.க.அழகிரி என்ன செய்யப் போகிறார்?
சென்னை: திமுகவினர் யாரும் மு.க.அழகிரியை கண்டு கொள்ளத் தேவையில்லை, அவரை அலட்சியப்படுத்துங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியே கூறி விட்டார். இதனால் அழகிரி தரப்பு கடும் சோகமாகியுள்ளதாம். ஆனால் அழகிரியோ இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம். அவர் வேறு திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
பாஜக தரப்பில் சிலருடன் அழகிரி பேசியுள்ளதாகவும், தேர்தல் சமயத்தில் பாஜகவில் அவர் இணையக் கூடும் அல்லது இணைந்து செயல்படக் கூடும் என்பது போல பேச்சு அடிபடுகிறது.
அதேசமயம், அப்படி ஒரு முடிவை அழகிரி எடுத்தால், அவரால் இனி நிரந்தரமாக திமுகவில் இணைய முடியாமல் போகலாம் என்று அழகிரி ஆதரவாளர்கள் பயப்படுகிறார்கள்.

தீராத பங்காளிச் சண்டை
பங்காளிச் சண்டை தீராது என்பார்கள். அதுபோலத்தான் ஆகி விட்டது அழகிரி -ஸ்டாலின் மோதல். ஆரம்பத்தில் லேசுபாசாக இருந்தது. பின்னர் வெடித்துச் சிதறி கோஷ்டிப் பூசலாக மாறியது.

அழகிரி நீக்கம்
சண்டை உச்சத்திற்குப் போனபோது, கருணாநிதியுடனேயே மோத ஆரம்பித்தார் அழகிரி. அதுதான் அவர் செய்த தவறாகப் போனது. கட்சியை விட்டு அழகிரியை நீக்கியது திமுக.

மீண்டும் திரும்பப் பேச்சு
இந்த நிலையில் அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு கருணாநிதி குடும்பத்தில் சிலர் தீவிரமாக முயற்சித்து வந்தனர். இதில் கருணாநிதியும் இறங்கி வருவது போலத் தெரிந்தது.

மீண்டும் மரத்தில் ஏறிய வேதாளம்
ஆனால் மீண்டும் மரத்தில் ஏறிய வேதாளம் போல, அழகிரியின் பேச்சால் அந்த முயற்சி தற்போது கெட்டுக் போய் விட்டது. காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அது ஜெயிக்காது. அதிமுகவை வெல்ல முடியாது என்று அழகிரி கூறப் போக, கருணாநிதி கடுப்பாகி விட்டார்.

அலட்சியப்படுத்துங்கள்
திமுகவினர் யாரும் அழகிரிப் பேச்சைக் கண்டுகொள்ள வேண்டாம். அவரை அலட்சியப்படுத்துங்கள் என்று கருணாநிதி கூறி விட்டார். இதனால் திமுக தரப்பும் அமைதியாக அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது.

கையறு நிலையில் அழகிரி
இப்படி திமுகவில் சேரக் கிடைத்த கடைசி வாய்ப்பும் கைவிட்டு விட்டுப் போன நிலையில் கிட்டத்தட்ட கையறு நிலையில் நிலையில் இருக்கிறாராம் அழகிரி.

பாஜகவில் சேர முயற்சி?
இருப்பினும் அவர் சற்றும் மனம் தளரவில்லையாம். மாறாக எப்போதும் போலத்தான் இருக்கிறாராம். அதேசமயம் பாஜகவில் சேர முயற்சி செய்வதாக பேச்சு அடிபடுகிறது.

அதிரிச்சியில் ஆதரவாளர்கள்
அழகிரி இப்படி ஜாலியாக இருக்க மறுபக்கம் அவரது ஆதரவாளர்கள் கடுப்பாக காணப்படுகிறார்களாம். எப்படியும் அண்ணன் மறுபடியும் கட்சிக்குள் போய் விடுவார், நாமும் பழைய ஜபர்தஸ்துக்கு மாறி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர் அவர்கள். ஆனால் அதில் மண் விழுந்து விட்டதால் வருத்தமடைந்துள்ளனராம்.

இப்படியே போனா எப்படி
அழகிரி சமாதானமாகி மீண்டும் திமுகவுக்குத் திரும்பினால்தான் அவருக்கும் நல்லது, அவரையே நம்பியுள்ள நமக்கும் நல்லது. ஆனால் அவர் இப்படி எல்லாப் பக்கமும் அணை கட்டினால், நாம் ஸ்டாலின் அணிக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பலரும் கருத ஆரம்பித்துள்ளனராம்.

பாஜகவுக்கு போனால் கஷ்டம்
மேலும் அழகிரி, சற்று தாமாதனாலும் சரி திமுகவுக்கு மட்டுமே திரும்ப வேண்டும். மாறாக பாஜகவிலோ அல்லது வேறு எங்குமோ போனால் நிரந்தரமாக அவர் திமுகவிலிருந்து தூர வைக்கப்படும் அபாயம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
என்ன செய்யப் போகிறாரோ அழகிரி.?












Click it and Unblock the Notifications