அதிமுக அந்தப் பக்கம், திமுக இந்தப் பக்கம், பாஜக இப்டிக்கா, காங்கிரஸ் அப்டிக்கா... அப்ப தேமுதிக?
சென்னை: பாரசக்தி படம் போல மாறி வருகிறது தமிழக அரசியல் சூழ்நிலை... விசித்திரமான சூழ்நிலை இங்கு உருவாக ஆரம்பித்திருக்கிறது. அதிமுக, திமுக, பாஜக ஆகியவை தனித் தனி வழியில் செல்வது உறுதியாகி விட்ட நிலையில், தேமுதிகவின் நிலைதான் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அதை அத்தனை முக்கியக் கட்சிகளும் திராட்டில் விடத் தயாராகி வருவது போலத் தெரிகிறது.
அதிமுக நிச்சயம், பாஜகவை கூட்டணிக்குச் சேர்க்காது என்பது உறுதியானது. அதேசமயம், நேற்று திமுக தனது நிலைப்பாட்டை அறிவித்து விட்டது. காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம், தேமுதிகவையும் தீண்ட வேண்டாம் என்று அக்கட்சியினர் பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பாஜக, திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
காங்கிரஸைப் பொறுத்தவரை அதிமுகவாலும் தீண்டப்படாத நிலையில்தான் உள்ளது. அப்படி காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அடி விழும்.. காரணம், ஈழப் பிரச்சினையில் காங்கிரஸார் மீது மக்கள் அத்தனை ஆத்திரத்தில் உள்ளனர். மேலும் ஈழப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு கட்சி காங்கிரஸ்.
இப்போது விஷயம் என்னவென்றால் தேமுதிகவின் நிலைதான். அதன் நிலைதான் கேள்விக்குறியாகி வருகிறது. இந்தக் கட்சியை யார் கூட்டணிக்குள் சேர்க்கப் போகிறார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

தனித்துப் போட்டியிடும் அதிமுக
தமிழகத்தில் தெளிவான முறையில் லோக்சபா தேர்தலை சந்திக்கத் தயாராகியிருக்கும் முதல் கட்சி அதிமுகதான். அக்கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதேசமயம் தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளுக்கு மட்டும் சில இடங்களை அதிமுக ஒதுக்கும்.

காங்கிரஸ் வேண்டாம் - திமுகவின் நிலை இது
தற்போது கூட்டணி தொடர்பான தனது நிலையை விளக்கியுள்ளது திமுக. அதாவது காங்கிரஸுடன் இல்லை என்று கூறி விட்டது திமுக. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணியா என்பதையும் அது சொல்லவில்லை. அதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

அதிமுகவுடன் கிடையாது - இது பாஜக
தற்போது பாஜகவும் தனது நிலையை இன்று தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது அதிமுகவுடன் கூட்டணி கிடையாது, திமுகவுடனும் கிடையாது என்று அக்கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். அதேசமயம், தேசிய அளவிலான தலைமையின் கருத்தா இது என்று தெரியவில்லை.

காங்கிரஸ் நிலை...
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது தலைமையில் ஒரு காலத்திலும் கூட்டணி அமைந்ததில்லை. யாராவது அவர்களைக் கூப்பிட்டால் குடுகுடுவென ஓடிப் போய் சேர்ந்து கொள்ளும் அளவில்தான் அது உள்ளது. அதாவது 5 ஸ்டார் சாக்லெட் கொடுப்பது யாரோ அவர்களுடன் ஒட்டிக் கொள்ளும் பச்சைக் குழந்தை போலத்தான் காங்கிரஸ் இன்னும் உள்ளது.

குழப்பத்தில் தேமுதிக
தேமுதிக நிலைதான் தற்போதைக்கு குழப்பமாக உள்ளது. இப்போதைக்கு அது எந்தக் கூட்டணியிலும் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி முடிந்து விட்டது. திமுகவுடன் கூட்டணியா என்பது தெரியவில்லை. காங்கிரஸுடன் போவார்களா என்பதும் புரியவில்லை. பாஜக பக்கம் சாய்வார்களா என்பதிலும் தெளிவில்லை

அப்படியானால் பாமக
அதேபோலத்தான் பாமகவின் நிலைப்பாடும். அவர்கள் தனித்தே போட்டி என்று தான் சொல்லி வருகிறார்கள். கூடவே ஜாதிக் கட்சிகள், அமைப்புகளையும் கூட்டுக்குச் சேர்க்கப் போவதாக சொல்கிறார்கள். அதேசமயம், பாஜக பக்கம் அவர்கள் சாயக் கூடும் என்ற பேச்சுக்களும் உலா வந்தபடியே உள்ளன.

இவர்களும் இருக்கிறார்கள்
இவர்கள் தவிர விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முல்ஸீம் கட்சிகள் என பலரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே உள்ள கூட்டணிகளில் இடம் பெற்றிருப்பவர்களாகவே உள்ளனர். தனிப் பெரும் சக்தியாக இவர்கள் திகழவில்லை. அல்லது அப்படி உருவாக விரும்பாதவர்களாக உள்ளனர்.

தேமுதிக நிலை...என்னவாகும்
தற்போதைய நிலையில் தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என்பது தெரியவில்லை. திமுக கூட்டணிக்குப் போகுமா அல்லது பாஜக கூட்டணிக்குப் போகுமா என்ற கேள்விகள் உள்ளன.

ஆனால் திமுக ஏற்காது...
சமீபத்தில் நடந்த ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக தனித்துத்தான் போட்டியிட்டது. அந்தக் கட்சி வேட்பாளர், அதிமுகவின் கடுமையான முயற்சிகளையும் மீறி நல்ல ஓட்டுக்களைப் பெற்றார். டெபாசிட்டும் பெற்றார். 30 சதவீத வாக்குகளையும் அள்ளினார். இது நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே நிச்சயம் தேமுதிகவை திமுக விரும்பாது என்றுதான் கூறுகிறார்கள்.

தேசிய அளவில் தேவைப்படுவதால்...
அதேசமயம், தேசிய அளவில் தனக்கு ஒரு ஸ்டிராங்கான பாதுகாப்பு தேவை என்ற நிலையை திமுக விரும்புவதால் தேசிய அளவிலான கூட்டணியில் இது நிச்சயம் இடம் பெறும். அது காங்கிரஸாக இருக்கலாம் அல்லது பாஜகவாக இருக்கலாம். தற்போது காங்கிரஸை உதறி விட்டதால், திமுகவின் சாய்ஸ் பாஜகதான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள்.

ஆனால் வைகோ இருக்காரே...
ஆனால் தற்போது பாஜக அணியில் வைகோ இடம் பெறப் போவதால், அவர் ஏற்கனவே பாஜக தலைமையைப் பார்த்துப் பேசி விட்டதால் அது திமுகவுக்கு சங்கடத்தைக் கொடுக்கும் என்று தெரிகிறது. அதேபோல பாமகவும் போய் பாஜகவில் சேர்ந்து விட்டால் திமுகவுக்கு மேலும் சங்கடமாகலாம்.

சரி, பாஜக அணி எப்படி இருக்கும்
அதேசமயம், எதற்கும் ஒரு தற்காப்பு முயற்சியாக ,தன் தலைமையில் தமிழகத்தில் தனி அணியை அமைக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது பாமக, மதிமுக,தேமுதிகவை வைத்து ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்த பாஜக முயல்வதாகவும் பேச்சு உள்ளது.

தனித்துப் போட்டியிட்டால் குளோஸ்...
ஆனால் தேமுதிக நிச்சயம் தனித்துப் போட்டியிடாது என்கிறார்கள். அப்படிப் போட்டியிட்டால் கட்சி காலியாகி விடும். ஒரு சீட்டில் கூட அவர்களால் வெல்ல முடியாது என்கிறார்கள்.வழக்கம் போல வாக்குகளைப் பிரிக்க மட்டுமே தேமுதிகவால் முடியும் என்பதால் தேமுதிக அந்த தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுக்காது என்று நம்பப்படுகிறது.

எனவே...
எனவே இப்போதைய நிலையில் அதிமுகவின் பாதை தெளிவாக உள்ளது. திமுகவும் கிட்டத்தட்ட ஓரளவு தெளிவாகி விட்டது. காங்கிரஸ் நிலையும், தேமுதிக நிலையும்தான் திரிசங்கு நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications