Exclusive: என்ன செய்ய போகிறார் வைகோ.. பேசாமல் இப்படி பண்ணலாமே!

வைகோ அரசியல் களத்தில் இனி என்ன முடிவு எடுக்க போகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகோ இனி என்ன செய்ய போகிறார்? என்பதே அரசியல் களத்தில் மிக முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!

வைகோ ஒரு சிறந்த அரசியல்வாதி, நாடாளுமன்றவாதி, அரசியல்வாதிகளிடையே அறிவுப் பூர்வமாக பேசுகிற அறிவாளி. சிறந்த பேச்சாளர், சமூக அக்கறை நிறைந்தவர். மீத்தேன் பிரச்சனை, கெயில் பிரச்சனை, சாய தொழிற்சாலை கழிவுகள், சீமைக் கருவேலமரம் என்று மக்களையும் மண்ணையும் பாதிக்கிற எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து மற்ற வேறெந்த தலைவர்களையும்விட உரத்து குரல் கொடுத்து போராடுபவர் வைகோதான் என்றால் அது மிகையல்ல. அதை மறுப்பதற்கும் இல்லை.

ஆனால், இந்த பணிகளை எல்லாம் அவர் மக்களைத் திரட்டி செய்திருக்க வேண்டும். முதலில் ஒரு பிரச்சனையைப் பற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு எதிராக மக்களிடையே ஒரு பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும். பின்னர், மக்கள் திரளுடன் போராட வேண்டும். இப்படியான போராட்டங்கள் மூலம் வைகோ தனது கட்சியை பலப்படுத்தியிருக்க வேண்டும். இப்படி செய்திருப்பாராயின் மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் வைகோவைத் தேடிவந்திருப்பார்கள்

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்

அதைவிட்டுவிட்டு மண்வெட்டியையும் அரிவாளையும் தூக்கி கொண்டு தலைப்பாகை கட்டிக்கொண்டு கருவேல மரங்களை வெட்ட போனால் என்ன பிரயோஜனம்? ஏதேனும் பிரச்சனை என்றால், சில நூறு அல்லது அதற்கும் குறைவான ஆதரவாளர்களுடன் இவர் மட்டும்தான் களம் இறங்குகிறார். அன்றைய தினம் இவரது செய்திகள் மீடியாக்களில் இடம் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால், மக்கள் இதில் இறங்கவில்லையே? அவர்கள்தானே முக்கியம்? இந்த பணிகளில் மக்களை ஈடுபடுத்தும் வேலையை வைகோ செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தை இன்னும் எளிமையாகவும், சுருக்கமாகவும் சொன்னால் அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள்தான் "கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்" இதைத்தான் கடந்த காலங்களில் வைகோ கையாண்டிருக்க வேண்டும். ஆனால், வைகோவோ தனிநபராக புரட்சியை நடத்தி விடலாம் என்று நினைத்துக்கொண்டு நடக்கிறார்.

மனம் நொந்த வைகோ

மனம் நொந்த வைகோ

அரசியலை பொறுத்தவரை வைகோ, ஆரம்பத்தில் திமுகவில் அங்கம் வகித்தபோது, கடைசிவரை திமுக கூட்டணியில்தான் இருக்க விரும்பினார். ஆனால், அவரது சூழ்நிலை அதை அனுமதிக்கவில்லை. திமுகவில் கருணாநிதியின் ஆதரவோடு ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கிய பிறகு வைகோ மனம் நொந்தது நியாயமே. இந்த விஷயத்தில் கருணாநிதி தரப்பில் தவறு நடந்ததும் உண்மையே. வைகோவின் ஆதங்கத்தை அதிகப்படுத்தி திமுகவிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்து மதிமுகவை துவக்க ஏற்பாடு செய்தார் எல்.கணேசன். வைகோ மீதான பற்றாலோ, பாசத்தோலோ இதை எல்.கணேசன் செய்யவில்லை. திமுகவை உடைக்க வேண்டும் என்ற அப்போதைய அதிமுகவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே இதை மேற்கொண்டார் என்பதெல்லாம் பழைய கதை.

ஸ்தாபன அனுபவம்?

ஸ்தாபன அனுபவம்?

வைகோவை பொறுத்தவரை பல திறமைகள் உண்டு. அதை யாராலும் மறுப்பதற்கில்லை. ஆனால் போதிய ஸ்தாபன அனுபவம் அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது. கடந்த கால தேர்தல்களின்போது ஒவ்வொரு முறையும், வைகோ, திமுகவுடன் கூட்டணியா? அதிமுகவுடன் கூட்டணியா என்ற விவாதத்தை தமிழகம் முழுவதும் நடத்தி விடுவதே அவர் மீதான நம்பகத் தன்மையை குறைத்து காண்பித்து விட்டது. ஒருதலைமை என்பது எப்போதுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு புகாரோ, குற்றச்சாட்டோ ஒரு தலைவர் மீது எழுமானால், "நிச்சயம் இருக்காது, எங்கள் தலைவர் அத்தகையவர் அல்ல" என்று அவரை பின்பற்றுவோர் உறுதியாக வாதாடும் அளவிற்கு அவர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

உடன்பாட்டில் கையெழுத்து

உடன்பாட்டில் கையெழுத்து

இந்த நம்பிக்கை எப்போது உடைந்தது என்றால், திருச்சி, திமுக மாநாட்டிற்கு வருவார் என்று ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் காத்திருந்தபோது, நேராக போயஸ் தோட்டத்திற்கு போய் 35 சீட்டுக்களுக்கான உடன்பாட்டில் கையெழுத்து போட்டதுதான் வைகோவின் மீதான நம்பகத்தன்மையை முற்றிலும் நாசம் செய்து விட்டது. இன்னும் இதுபோல பல உதாரணங்கள் உள்ளன.

அசத்திய ஜெயலலிதா

அசத்திய ஜெயலலிதா

அதே போல, வைகோவிடம் அரசியல் நிலைத்தன்மை கிடையாது. எதிர்க்கட்சிகள் ஒரு முடிவினை எடுத்தால், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு முடிவை நாம் எடுக்கும் திறன் வேண்டும். உதாரணத்திற்கு ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி என்றுமே ஆதரவாக இருந்தார் என்பதால், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யப்போவது என்னவோ திமுகதான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலிதா ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார். 7 பேர் விடுதலையில் சாதகமான எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல், பொதுவான அரசியல் நோக்கர்களும் பொதுமக்களும் கருதிவந்தனர். ஆனால், யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் ஜெயலலிதா இதில் தலையிட்டு, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த தீர்மானத்தையே சட்டமன்றத்தில் போட்டு அசத்திவிட்டார்! இது கருணாநிதி உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காத ஒன்று! எனவே இதுபோல, எதிரிகளே எதிர்பார்க்காத வகையில்தான் ஒரு அரசியல் முடிவானது இருக்க வேண்டும்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

2014 நாடாளுமன்ற தேர்தலிலும், 2016 சட்டமன்ற தேர்தலிலும் வைகோ ஒரு பிரமாதமான வியூகம் அமைத்தார். அதிலும், சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியினர் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மாட்டாரகள், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கமாட்டார்கள் என்று பலரும் கருதியபோது, வைகோவின் முயற்சியால், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது மட்டுமில்லாமல், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தனர்.

உணர்ச்சிவசப்படுகிறார்

உணர்ச்சிவசப்படுகிறார்

ஆனாலும், வைகோவின் அரசியல் தந்திரங்களும் வியூகங்களும் தொடர்ந்து தோல்வி முகத்தையே கண்டுவந்திருக்கிறது. வைகோ யாரும் எதிர்பாராத ஒரு முடிவை எடுக்கிறார் என்றால், அது தோல்வியடைந்தால் உணர்ச்சிவசப்பட்டு இன்னொரு முடிவை எடுக்கிறார். அதுவும் தோல்வியடைந்தால் மற்றொரு அதிரடி முடிவு எடுப்பது. இதுதான் வைகோவின் மைனஸ் மட்டுமல்ல மதிமுகவின் மிகப்பெரிய மைனஸும்கூட!

களப்பணியில் தவறிவிட்டார்

களப்பணியில் தவறிவிட்டார்

ஒரு அரசியல் கட்சிக்கு தொடர்ந்து சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கான உறுப்பினர் யாராவது ஓரிருவர் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் பொதுமக்களிடையே முக்கியத்துவம் இருக்கும். இல்லையென்றால் இந்தியா போன்ற சமூக அரசியல் அமைப்புகொண்ட நாட்டில் ஒரு கட்சி தனது தொண்டர்களைக்கூட நீண்டகாலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அந்த வகையில், வைகோ தேர்தல் அரசியலில் குறைந்தபட்ச வெற்றி முகத்துடன் இருந்தபோது தனது கட்சியினர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினராக தொடருவதற்கான தேர்தல் பணிகளைச் செய்ய தவறிவிட்டார். களப்பணியில் ஈடுபட்டு கட்சியை பலப்படுத்தவும் தவறிவிட்டார். வைகோ இதையெல்லாம் உணர்ந்து அறிந்திருக்கிறாரா என்றால், இவற்றை சரிசெய்துகொள்ள சூழ்நிலையும், உடல்நலமும் காலமும் வைகோவிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

சதுரங்க காய்கள்

சதுரங்க காய்கள்

வைகோ கடந்த சில காலங்களாக திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். கருணாநிதியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார், மெரினாவில் இடம் கொடுக்காவிட்டால் புரட்சி வெடிக்கும் என்றார், திமுகவின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பில் அமர வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்தார். வருகிற தேர்தலில், பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவையும், என்றுமே மலராத தாமரையையும் விட்டு விலகுவதுதான் சரியாக இருக்கும் என்று உறுதியாக கணித்து அரசியல் சதுரங்க காய்களை நகர்த்துகிறார்.

மூப்பனார் பாணி

மூப்பனார் பாணி

ஸ்டாலின் இமேஜை வைத்து 10 அல்லது 15 சீட்டுக்களாவது வாங்கி அதில் ஜெயித்துவிட வேண்டும் என்று வைகோ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட வைகோ ஜி.கே. மூப்பனார் பாணியை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்பதே வரலாறு சொல்லும் பாடமாக இருக்கிறது. தமாகா என்னும் கட்சியை மிக மிக தைரியமாக ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றவர் ஜி.கே. மூப்பனார். அவருடைய மறைவுக்கு பிறகு மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தமாகா தலைவரான ஜிகே, வாசன், தாய்க்கட்சியான காங்கிரசுடன் இணைந்து அதை பலப்படுத்தினார். அதன்மூலம் தனது ஆதரவாளர்களையும் தக்கவைத்து கொண்டார்.

காலம் தரும் வாய்ப்பு

காலம் தரும் வாய்ப்பு

இதுபோல மதவாத சக்திகளை தடயமின்றி அழிக்க ஏன் வைகோ திமுகவுடன் இணைய கூடாது? வைகோ முன்பு காலம் இப்படி ஒரு வாய்ப்பையும் முன்வைத்துள்ளது. பார்ப்போம்... இனி வைகோ என்ன செய்ய போகிறார் என்று!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+