வைகோ தலைமையில் "மக்கள் ஜனநாயகக் கூட்டணி" அமைந்தபோது.. பிளாஷ்பேக்!
சென்னை: வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் வைகோ தலைமையில் சட்டசபைத் தேர்தலில் ஒரு கூட்டணி அமைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 1996ம் ஆண்டும் வைகோ தலைமையில் ஒரு ஆரவாரமான கூட்டணி களம் கண்டது. ஆனால் ரிசல்ட்.....?
1996ம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. காரணம், ஜெயலலிதாவுக்கு எதிராக அப்படி ஒரு கொந்தளிப்பை தமிழகம் கண்ட ஆண்டு அது. தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய சக்தி பிறந்த ஆண்டு அது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சொல்லுக்கு தமிழகமே தலையசைத்த ஆண்டு அது.
தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத அந்த ஆண்டில்தான் மதிமுகவும், பாமகவும் தனித் தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கி சலசலப்பை உருவாக்கப் பார்த்தன. ஆனால் ரஜினி - மூப்பனார் புண்ணியத்தால் திமுக அந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
1996 தேர்தலும், அதில் மதிமுக, பாமக போட்ட திட்டங்களும் குறித்த ஒரு பிளாஷ்பேக்...

மதிமுக - பாமக
1996 தேர்தலின்போது அதிமுக அரசுக்கு எதிராக மிகப் பெரிய அதிருப்தி அலை வீசியது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது கடும் அதிருப்தி நிலவியது. காங்கிரஸ் கட்சியும் உடைந்து தமாகா பிறந்திருந்தது. இந்தத் தேர்தலில் மதிமுகவும், பாமகவும் இணைந்து புதியி பிரளயத்தைக் கிளப்ப முடிவு செய்து களம் குதித்தன.

தைலாபுரம் விரைந்த வைகோ
அப்போது பாமக சக்தி வாய்ந்த கட்சியாக இருந்தது. வட மாவட்டங்களில் பாமகதான் அசைக்க முடியாத கட்சியாகவும் விளங்கியது. பாமகவுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து திமுக, அதிமுகவுக்கு சவால் விடுக்க இரு கட்சிகளும் விரும்பின. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேச தைலாபுரம் விரைந்தார் வைகோ.

பேச்சுவார்த்தையில் சிக்கல்
இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதில் சிக்கல் நிலவியது. இதனால் பேச்சுவார்த்தை முறிந்தது. இரு கட்சிகளும் தனித் தனியாக கூட்டணி அமைக்க தீர்மானித்தன.

பிறந்தது மக்கள் ஜனநாயகக் கூட்டணி
வைகோ தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கினார். அதன் பெயர் மக்கள் ஜனநாயகக் கூட்டணி. இதில் மதிமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தன. மதிமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கட்சி 40 தொகுதிகளில் நின்றது. ஜனதாதளம் 16 தொகுதிகளில் போட்டியிட்டது.

சங்கரய்யா vs நல்லகண்ணு
கம்யூனிஸ்ட் கட்சிகளின் முது பெரும் தலைவர்களான நல்லகண்ணுவும், சங்கரய்யாவும் நேருக்கு நேர் மோதிய வித்தியாசமான தேர்தல் அது. மார்க்சிஸ்ட் கட்சி மதிமுக கூட்டணிக்குப் போக, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெற்றது.

டாக்டர் ராமதாஸும், வாழப்பாடி ராமமூர்த்தியும்
பாமக மறுபக்கம் சமூக நீதிக் கூட்டணியை உருவாக்கியது. இதில், பாமக 116 தொகுதிகளிலும், வாழப்பாடி ராமமூர்த்தியின் அகில இந்திய திவாரி காங்கிரஸ் 46 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் குமரி அனந்தன் தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே இடம் பெற்றது. அதிமுக 168 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

வெற்றிக் கூட்டணி - திமுக
இத்தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைத்த கட்சி திமுகதான். ரஜினிகாந்த் புண்ணியத்தால் தமாகவை கூட்டுக்குச் சேர்த்த திமுக இத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை சம்பாதித்தது. திமுக 117 தொகுதிகளிலும் தமாகா 80 தொகுதிகளிலும், சிபிஐ 31 தொகுதிகளிலும், பார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் போட்டியிட்டன.

பலமுனைப் போட்டி இருந்தும் கூட
1996 தேர்தலில் இப்படி பலமுனைப் போட்டியை தமிழகம் கண்ட போதிலும் கூட ஜெயலலிதா மீதான மிகக் கடுமையான மக்கள் அதிருப்தியும், உடைந்த காங்கிரஸும், ரஜினி அலையும் சேர்ந்து திமுகவை கரையேற்றியது.

வைகோவின் 2வது மக்கள் கூட்டணி
1996 தேர்தலில் வைகோ உருவாக்கிய பெரும் தோல்வியையே சந்தித்தது. காரணம், திமுக கூட்டணிக்கு ஆதரவாக காணப்பட்ட பெரும் ஆதரவு அலை. அதில் அடிபட்டு வைகோவின் மக்கள் ஜனநாயகக் கூட்டணி சின்னாபின்னமானது. ஒரு இடத்தில் கூட அது ஜெயிக்க முடியவில்லை.

தப்பித்த பாமக
அதேசமயம், பாமக தப்பிப் பிழைத்தது. அக்கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைத்தன. அது அப்போது பாமகவுக்கு பெரிய வெற்றிதான். காரணம், அந்தத் தேர்தலில்தான் பாமக முதல் முறையாக அதிக இடங்களைப் பெற்று தான் ஒரு சக்தி என்பதை நிரூபித்தது.

முடங்கிய சிபிஎம்.. மிளிர்ந்த சிபிஐ
மதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. திமுகவுடன் கை கோர்த்த சிபிஐக்கோ 8 இடங்களில் வெற்றி கிடைத்தன.

பாஜகவுக்குக் கூட ஒரு இடம்
பாஜகவுக்குக் கூட அப்போது ஒரு இடத்தில் வெற்றி கிடைத்தது. கன்னியாகுமரியில் வேலாயுதம் வெற்றி பெற்று முதல் பாஜக எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

தனித்து விடப்பட்ட மதிமுக!
அந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட எல்லோருக்க்குமே இடம் கிடைத்தது. ஏன் அதிமுகவுக்குக் கூட 4 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆனால் வைகோவின் மதிமுக மட்டுமே மக்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்த முறை என்ன நடக்கும்?.. பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications