அதிகாலையிலேயே அதகளப்படும் ஆரணி! யார் இந்த சேவூர் ராமசந்திரன்?
ஆரணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வரும் நிலையில் அவர் யார் என்பதை பார்க்கலாம்.
அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமசந்திரன். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களிலும் அவர் சொத்துகளை வாங்கி குவித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

அது போல் சேவூர் ராமசந்திரனின் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. எதற்காக இந்த சோதனை என்பது குறித்து அதிகாரிகள் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சொந்த ஊர்
இந்த நிலையில் சேவூர் ராமசந்திரன் யார் என்பதை பார்க்கலாம். இவர் 1960 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது சொந்த ஊர் ஆரணியை அடுத்த சேவூர் ஆகும். இவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார். சேவூர் ராமசந்திரனுக்கு மணிமேகலை என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
முதலியார் சமூகம்
இவர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். ஆரணியில் முதலியார் சமூகத்தினர் பெருவாரியாக இருந்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் இவருக்கு செல்வாக்கு இருந்ததை அடுத்து இவருக்கு 2016 ஆம் ஆண்டு ஆரணி சட்டசபை தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.
என்னென்ன பதவிகள்
முன்னதாக இவர் 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒன்றியக் குழு உறுப்பினராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பேரவையின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் மற்றும் 2006- 2011 ஆம் ஆண்டு வரை சேவூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.
பின்னர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆரணி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்து அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விவசாயி
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சேவூர் ராமசந்திரன் விவசாயியாக இருந்தார். இவரது மகன் சந்தோஷ்குமார் பிடெக் படித்துவிட்டு புனேவில் பணியாற்றி வருகிறார். ஆர்.விஜயகுமார் பிடெக் படித்துவிட்டு பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில்
ஆரணியில் புத்தரகாமேட்டீஸ்வரர் கோயிலில் ரூ 2.5 கோடி மதிப்பில் திருமண மண்டபத்தை சேவூர் ராமசந்திரன் கட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அது போல் ஆரணி கைலாசநாதர் கோயிலுக்கு ரூ 31 லட்சம் மதிப்பீல் சேவூர் ராமசந்திரன் தலையிட்டு தேர் அமைக்கும் பணியும் நடைபெறுவதாக சொல்லப்பட்டது. கைலாசநாதர் கோயில் குளத்தை ரூ 50 லட்சம் செலவில் புதுப்பிக்கவும் திட்டமிட்டிருந்தது.
புத்திர பாக்கியத்தை கொடுக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் ரூ 1 கோடி செலவில் புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள கல்வெட்டுகளை பத்திரப்படுத்தியதும் கும்பாபிஷேகம் பணிக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
வந்தவாசி கோயில்
சேவூர் ராமசந்திரன் அமைச்சராக இருந்த போது வந்தவாசி உலகநாத பெருமாள், ஜலகண்டேஸ்வரர் கோயில், கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமம் உள்ளிட்ட இடங்களில் தேர் பணிகள், கோயில் செப்பனிடும் பணிகள் என பல்வேறு பணிகளை அவர் தலையிட்டு செய்ததாகவும் சொல்லப்படுகிறது . வந்தவாசி தவளகிரீஸ்வரர் கோயில் மலையில் படிகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications