தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் யார்? ஃபைனல் லிஸ்ட் ரெடி! முட்டிமோதும் கதர்ச்சட்டை பிரமுகர்கள்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இதோ மாற்றப்படுவார், அதோ மாற்றப்படுவார் என கடந்த ஓராண்டாக ஒரு தகவல் உலா வந்த நிலையில் இப்போது உண்மையாகவே மாற்றத்துக்கான பணிகளை கையில் எடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்டார். இருப்பினும் அவரை உடனடியாக மாற்ற விரும்பாத கட்சி மேலிடம் அழகிரிக்கு பதவி நீட்டிப்பு செய்து கூடுதலாக போனஸ் பீரியட் வழங்கி வருகிறது.

இது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மற்ற முக்கிய பிரமுகர்களுக்கு வாய்ப்பு மறுக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்னும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு கூட முழுமையாக இல்லாததால், காங்கிரஸை தமிழகத்தில் வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் அக்கட்சியின் மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை இப்போதே கொண்டு வந்தால் தான் அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்குவதற்கு சரியாக இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜயதரணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், மீண்டும் திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்காக காய் நகர்த்தி வருகின்றனர்.

இதில் செல்வப்பெருந்தகை மற்றும் ஜோதிமணி ஆகியோரது பெயர்கள் ஃபைனல் லிஸ்டில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் மீது ராகுல் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே புலி வருது புலி வருது கதையாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் குறித்த செய்திகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றியை குவித்ததும் அந்த செண்டிமெண்ட் தான் அவருக்கு போனஸாக கூடுதல் கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்து வருவதும் கவனிக்கத்தக்கது.
இதனிடையே தன்னிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பதவி பறிக்கப்படலாம் என்பதால் தான் கே.எஸ்.அழகிரியும் முன்பை போல் படுதீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுவதில்லை.












Click it and Unblock the Notifications