இது தமிழருக்கான பெருமை! லோக்சபாவில் செங்கோல் நிறுவப்படுவது ஏன்? பாயிண்டை கூறிய நிர்மலா சீதாராமன்
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்படுவது ஏன்? என்பது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் விரிவான விளக்கம் அளித்தார். மேலும் இது தமிழருக்கான பெருமை எனவும் அவர் கூறினார்.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்ட்டா திட்டத்தில் புதிதாக நாடாளுமன்றம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28 ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே தான் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பை புறக்கணிக்கவும் 19 கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் தான் சென்னை ஆளுநர் மாளிகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கமாக கூறினார். இந்த பேட்டியில் ஆளுநர்கள் இல.கணேசன், ஆர்என் ரவி, தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் முருகன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையிலும், ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி பரிமாற்றம் நடந்ததை குறிப்பால் உணர்த்தும் வகையிலும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவிடம் 1947 ஆகஸ்ட் 14ம் தேதி இரவில் செங்கோல் வழங்கப்பட்டது. ஆட்சி பரிமாற்றத்தின் அடையாளமாக இந்த செங்கோல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த செங்கோல் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளது. ஆட்சி மாற்றத்தை குறிக்கும் செங்கோல் பரிமாற்றம் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதால் தமிழுக்கும், தமிழருக்கு பெருமை.

அடுத்த 100 ஆண்டு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்க போகிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க திருவாடுதுறை, தருமபுரம் உள்பட 20 ஆதினங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். செங்கோலை தயாரித்த உம்மிப்பிடி சகோதர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர்.
செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையான அழைப்பு விடுத்தார்.எதிர்க்கட்சிகளின் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவர்தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள். பிரதமர் மோடிக்காக இல்லாமல் மக்களுக்காவாவது நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications