கிரானைட் கொள்ளையர்களை காக்க முயன்று நீதிமன்ற கண்டனத்தை வாங்கிய தமிழக அரசு!
சென்னை: கிரானைட் முறைகேடு விவகாரத்தை வெளிக் கொண்டு வந்ததால் சகாயத்தை தமிழக அரசு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு மாற்றியது. அங்கும் அவர் சிறப்பாக செயல்பட்டதால் பொறுக்கவே முடியாமல் டப்பா துறைக்கு மாற்றியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கிரானைட் முறைகேடு விவகாரத்தை சகாயமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட ஆடிப் போனது தமிழக அரசு.
அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந்தார். சகாயம் குறித்தும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க சகாயத்தை விட பொருத்தமான அதிகாரி இருக்க முடியாது என்றும் தமிழக அரசுக்கு சூடு போட்டது.
ஆனால் பட்டும் திருந்தவில்லை என்ற கதையாக சகாயம் நியமனத்தை எதிர்த்து, அதாவது அரசுக்கு ஏற்பட்ட பெரும் வருமான இழப்பைக் கண்டு பிடித்துக் கொடுத்தவருக்கு எதிராக அதாவது அரசுக்கு எதிராகவே இந்த அறிவாளி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.
அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பைக் கண்டுபிடித்தவருக்கு எதிராகவே தமிழக அரசு வழக்குப் போட்ட விசித்திரத்தைப் பார்த்து அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர், வேதனைப்பட்டனர். இதோ இன்று மீண்டும் மூக்கறுபட்டு நிற்கிறது தமிழக அரசு.

வழக்கம் போல டிராபிக் ராமசாமி
தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்றைக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்ததோடு, விசாரணை அறிக்கையை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் குட்டு
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து உச்சநீதிமன்றத்தில் சகாயம் நியமனத்தை எதிர்த்து மனு போட்டது தமிழக அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் அதிரடியாக அதைத் தள்ளுபடி செய்து விட்டது.

சீராய்வு
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு மறுபடியும் பிடிவாதமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

என்ன லாஜிக் இது....
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் தமிழக அரசின் "லாஜிக்" குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு அதிர வைத்தனர்.

உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்து விட்டதே...
"தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வந்து சீராய்வு மனுவை தாக்கல் செய்தது ஏன் என்று நீதிபதிகள் கேட்டனர்.

எதுக்கு இந்த பயம்
அத்தோடு நில்லாமல், சகாயம் குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு ஏன் அச்சப்படுகிறது? என்றும் கேட்டனர்.

ஏன் அமல்படுத்தவில்லை
மேலும், சகாயம் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இது ஏன். இதுதொடர்பான தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனர். அத்தோடு நில்லாமல் அபராதமும் விதித்துள்ளனர். இது தமிழக அரசுக்கு பெரும் வெட்கக் கேடாக முடிந்துள்ளது.

கொள்ளையர்களுக்காக இப்படியா
உண்மையில் தமிழக அரசு சகாயம் விசாரணையை ஏன் தவிர்க்க விரும்புகிறது என்று புரியவே இல்லை. இதனால் அரசுக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது என்றும் தெரியவில்லை. ஆனால், கிரானைட் கொள்ளையர்கள் சிக்கி விடுவார்களே என்று அரசுத் தரப்பு பயப்படுவது மட்டும் நன்கு புரிகிறது.

சிக்கினால் என்ன ....
ஆனால் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்த கிரானைட் கொள்ளையர்கள் சிக்கினால் அரசுக்குத்தானே நல்லது. அதை சகாயம் சிறப்பாக செய்து அத்தனை பேரையும் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்துவாரே, இதனால் அரசுக்கு நல்லதுதானே நடக்கும் என்று அப்பாவி மக்கள் அப்பாவித்தனமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே
என்ன செய்வது பட்டும் திருந்துவதாக தெரியவில்லை இந்த அரசு.. மக்கள் வளத்தை விட, அரசின் செல்வம் காக்கப்படுவதை விட கிரானைட் கொள்ளையர்களுக்காக இப்படி "தாய்மை" உள்ளத்துடன் துடிக்கிறது அரசு.. இந்த லாஜிக்தான் யாருக்குமே புரியவில்லை.












Click it and Unblock the Notifications