வன்னியர் கல்வி அறக்கட்டளை பெயர் மாற்றம் ஏன்...? பாமக தலைவர் ஜி.கே.மணி விளக்கம்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் முத்துவிழா கண்டுள்ளதால் அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயரை ராமதாஸ் அறக்கட்டளை என மாற்றியதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைகளை மறைத்து உள்நோக்கத்துடன் சிலர் செய்தி பரப்புவது கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் ராமதாஸ் என்றும், வன்னியர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டது எனவும் அவர் விளக்கியுள்ளார்.

வன்னியர் அறக்கட்டளை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்து செயல்பட்டு வரும் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயர் ராமதாஸ் அறக்கட்டளை என கடந்த வாரம் மாற்றப்பட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் வெளியாகி வந்தன. அந்த செய்திகள் எதுவும் உண்மையில்லை என்றும், உள்நோக்கத்துடன் சிலர் பரப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

முத்து விழா
முத்துவிழா கண்ட ராமதாஸை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுவும் வன்னியர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்தே இதற்கு ராமதாஸ் ஒப்புதல் தெரிவித்ததாகவும் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

எம்.பி.சி.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் ராமதாஸ் என்றும், அறக்கட்டளைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர மற்றபடி அதன் நிர்வாகத்தில் ராமதாசுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் ஜி.கே. மணி சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்சரிக்கை
மேலும், இந்த விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கட்டுக்கதைகளை பரப்பக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சட்டப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாமக தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
