அன்புமணியின் ஒரு "வாக்குறுதி" நிறைவேறியது... ஆனால் தென் மாவட்டத்தில் போட்டியிடுவாரா?
சென்னை: பாமக சார்பில் வரும் சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உறுதி கூறியிருந்தார். அது தற்போது நிறைவேறியுள்ளது.
அதேசமயம், நீங்கள் ஏன் தென் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடாது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அதைக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி பதிலளித்தார். அந்த ஆசையை பாமக மேலிடம் நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் அன்புமணி பதிலளித்தார். அப்போது அவரிடம் இவ்வளவு பேசும் நீங்கள் வட மாவட்டம் அல்லாமல், தென் மாவட்டத் தொகுதி ஒன்றில் போட்டியிட வேண்டியதுதானே என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அன்புமணி, கட்சி உத்தரவிட்டால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று பதிலளித்தார்.
அதேபோல இதுவரை நடந்த தேர்தல்களில் முஸ்லீம்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ஏன் என்று இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அன்புமணி, பாமக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சமயங்களில் எங்களுக்குக் கிடைத்த தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருந்தது. இதனால் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. இந்த தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றார் அன்புமணி.
அவர் சொன்னது இன்று நிறைவேறியது. அதாவது பாமக இன்று அறிவித்த முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 2 முஸ்லீம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்னர். இருப்பினும் அவர் தென் மாவட்டத்தில் போட்டியிடுவாரா என்பது நிச்சயம் வாய்ப்பே இல்லாத ஒன்று என்றே தெரிகிறது.
நீங்கள் முதல்வராகி விட்டால் மட்டும் தமிழகத்தின் பிரச்சினைகளை சரி செய்து விட முடியுமா. 5 ஆண்டுகளில் இதை எப்படி செய்ய முடியும் என்கிறீர்கள் என்று இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அன்புமணி, நான் மத்தியில் சுகாதாரத் துறை அமைச்சராக ஐந்து ஆண்டு காலம் இருந்தபோது பல சாதனைகளைச் செய்தேன்., எனது ஆட்சிக்காலத்தில்தான் போலியோ ஒழிக்கப்பட்டது. குத்கா ஒழிக்கப்பட்டடது. சுகாதாரத் துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தேன்.
சுகாதார அமைச்சராக ஐந்து வருடத்தில் செய்த சாதனை. இங்கு செய்ய முடியாதா என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications