"இலை"யும் இல்லை.. தொப்பிக்கும் வரவேற்பில்லை.. மக்கள் ஆதரவும் இல்லை.. "ஷாக்"கில் தினகரன்!
இரட்டை இலை சின்னம் முடங்கிய நிலையில் தொகுதிவாசிகளின் ஒத்துழைப்பும் இல்லாததால் டிடிவி தினகரனின் தேர்தல் பிரச்சாரம் பிசுபிசுத்துள்ளது.
சென்னை: தொப்பி போட்டவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது என்பது டிடிவி தினகரன் விசயத்தில் உண்மையாகிவிட்டது. அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் இல்லாமல் அதிமுகவின் இரு அணிகளும் ஆர்.கே.நகரில் களம் காண்கின்றன. அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தொகுதி மக்களிடையே வரவேற்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போதே தொப்பி சின்னம் அணிந்து வந்த டிடிவி தினகரன், அன்றைய தினமே பிரச்சாரத்தை தொடங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொப்பியை மாட்டி விட்டு பிரச்சாரம் செய்ய வைத்தார்.

தொகுதியில் வரவேற்பில்லை
டிடிவி தினகரன் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தாலும் அவரது பிரச்சாரம் பெரிதாக களை கட்டவில்லை. கூட்டம் குறைவாகவே வருவதைப் பார்த்து கொந்தளிப்போயுள்ளாராம் டிடிவி தினகரன். அப்படி வரும் மக்களும் தொகுதிவாசிகள் இல்லை வெளியூர்வாசிகள் என்பதுதான் தினகரனின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

யார் இடத்தை யார் நிரப்புவது
ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே டிடிவி தினகரன் வந்துள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தாலும் யார் இடத்தை யார் நிரப்புவது? ஜெயலலிதாவும், டிடிவி தினகரனும் ஒன்றாகிவிடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் தொகுதிவாசிகள்.

சசிகலா பெயரை இல்லை
ஆர்.கே. நகரில் சசிகலாவிற்கு உள்ள எதிர்ப்பு அலையைப் பார்த்து அஞ்சிய டிடிவி தினகரன் மறந்தும் கூட சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ எதிலுமே போடவில்லை. என்றாலும் தொப்பி அணிந்து டிடிவி தினகரனுக்கு ஆர்.கே. நகர் தொகுதிவாசிகளிடையே வரவேற்பு இல்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. தினகரனுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு பெரிதும் இல்லை என்பதால் ஓட்டு கேட்டு வந்தவர்களில் பெரும்பாலும் தஞ்சாவூர், மதுரை, உடுமலைப்பேட்டை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆட்டோவில் பிரச்சாரம்
இரண்டாவது நாளாக நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் முருகன் கோயிலில் இருந்த முருகனை வணங்கிவிட்டு, அவரது பிரசாரத்தை ஆரம்பித்தார்.
குறுகிய தெருக்களில் வசதியாகச் செல்ல ஆட்டோ ஒன்றை பிரசாரத்துக்காக தயார் செய்து வைத்திருந்தார்கள். அந்த ஆட்டோவில்தான் தினகரன், நேதாஜி நகர் முழுவதும் வாக்கு கேட்டு வலம் வந்தார். பிறகு சிறிது தூரம் நடந்துசென்றும் வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதா பெயர்
நேதாஜி நகர் இரண்டாவது தெருவில் தினகரனின் ஆதரவாளராக உள்ள சுசிலாவின் பேத்திக்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார் டிடிவி தினகரன். இரட்டை இலையில்லை, சுயேட்சை போல தொப்பியில் போட்டியிடும் தினகரனுக்கு எந்தவித ஆதரவும் இருப்பதாகவே தெரியவில்லை.

ஆர்.கே. நகரில் தேறுவாரா?
தினகரனின் தேர்தல் பிரசாரம் ஆளும்கட்சியின் வேட்பாளருடைய பிரசாரம் போல இல்லாமல் களையிழந்து காணப்பட்டது. ஜெயலலிதா வருகிறார் என்றாலே தொகுதிவாசிகள் மட்டுமல்லாது மக்கள் கூட்டம் குவியும். ஆனால் தினகரனைப் பார்க்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சோர்வடைந்த தினகரன், வீதிகளில் வாக்குக் கேட்டுச் சென்ற போதும் மைக் பிடித்து அதிகம் பேசவில்லை. தொகுதிவாசிகள் பலரும் மதுசூதனனுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். பிரச்சாரத்திற்கே கூட்டமில்லை... ஓட்டுக்கள் விழுமா என்பதே தினகரனின் மைண்ட் வாய்ஸ் ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications