ஒரு வேளை எடப்பாடி அரசு கவிழ்ந்தால்.. கை கொடுப்பாரா ஓபிஎஸ்?
தினகரனை ஒதுக்கி வைப்பது என்று எடப்பாடி கோஷ்டியினரின் அறிவிப்பை தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டால் ஓ.பி.எஸ். தரப்பு அரை ஆதரிக்கும் எனத் தெரிகிறது.
சென்னை: தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற எடப்பாடி கோஷ்டியினரின் அதிரடி அறிவிப்பால் தினகரன் தரப்பு ஆட்சியைக் கவிழ்க்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்படி நிலைமை ஏற்பட்டால் ஓ.பி.எஸ். தரப்பு எடப்பாடி தரப்புக்கு ஆதரவு தரும் என கருதப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி அணிக்கு 122 எம்எல்ஏ-க்களும் எடப்பாடி அணியினருக்கு 11 எம்எல்ஏ க்களும் உள்ளனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது முறிந்து விட்டது. தற்போது தினகரனும் வெளியே வந்து விட்டார்.

தினகரனுக்கு ஜாமீன்
அமைச்சரவையில் மாற்றம் செய்யவில்லை என்றும் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தோப்பு கோஷ்டியினர் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இவர்களை தலைமை செயலகத்துக்கு வரவழைத்த முதல்வர் எடப்பாடி சமாதானம் செய்தார்.

அமைச்சர் ஜெயகுமாருக்கு ஆப்பு
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினருடன் இணைவதற்காக தினகரன், சசிகலா ஆகியோரை ஒதுக்கி வைத்ததாக அறிவித்த அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகியோரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூடி தினகரனுடன் சென்னைக்கு வந்ததும் வராததுமாக ஆலோசனை செய்தனர்.

சசிகலாவுடன் சந்திப்பு
அமைச்சரவை மாற்றம், தமிழகத்தில் அரசியல் நிலை, அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோரின் பதவி பறிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். இந்த சமயம் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் 20 அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி தினகரனை ஒதுக்கி வைப்பது என்று மீண்டும் அறிவித்தனர்.

11 எம்எல்ஏ-க்கள்
இதனால் எடப்பாடி அரசு கவிழுமா என்ற நிலை உள்ளது. எடப்பாடி அரசுக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தற்போது அமைச்சர் ஜெயகுமாரின் முடிவால் தினகரனுக்கு ஆதரவாக 11 எம்எல்ஏ-க்கள் திரும்பியுள்ளனர். எடப்பாடி அரசுக்கு 117 எம்எல்ஏ-க்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். உள்கட்சி பூசல் முற்றி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி அரசின் காலை வாரிவிட்டார்களேயானால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.

ஓபிஎஸ் கைகொடுப்பாரா?
வரும் ஜூன் 14-ல் சட்டசபை கூடும் போது ஏதேனும் ரகளை ஏற்படலாம் என்றே தெரிகிறது. இந்த சூழலில் ஆட்சி கவிழ்ந்தால் அது தினகரன் பெற்ற வெற்றியாகிவிடும். இதனால் தினகரனையும் சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ள எடப்பாடி தரப்புக்கு, ஓ.பன்னீர் செல்வம் தன்னிடம் உள்ள 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவை தந்தாரேயானால் எடப்பாடி அரசு தப்பிக்கும்.
இதை சாதகமாக்கி தனது வேலையை ஓபிஎஸ் தரப்பு சாதிக்க முயற்சிக்கும் என்றும் தெரிகிறது. மொத்தத்தில் அதிமுக அரசு நாறி நாசமாகப் போவது மட்டும் பிரகாசமாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications