பெட்ரோல் விலை உயர்வா? 6 மாதத்துக்கு ஒருமுறை வரம்பு மாற்றம் தேவை.. தமிழக பெட்ரோலிய டீலர்கள் கோரிக்கை
சென்னை: வலுவான மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பான விநியோகஸ்தர் பிணையம் இல்லாவிட்டால், இந்தியாவின் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் தான் ஏற்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.. அத்துடன் மிக முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. இந்த கோரிக்கையானது வாகன ஓட்டிகளின் கவனத்தையும் வெகுவாக பெற்று வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், பெட்ரோல் விலை குறையாமலேயே உள்ளது.. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்க வேண்டும், டீசல், பெட்ரோல் விலை குறைந்தால் மற்ற பொருள்களின் விலை குறையும் என்ற கோரிக்கையை வணிகர்களும், வாகன ஓட்டிகளும் விடுத்தபடி உள்ளனர். எனினும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் தென்படவில்லை.
பெட்ரோல் விலை உயர்வு
இன்று அதாவது 26ம் தேதி சென்னையில் பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், 6 மாதங்களுக்கு ஒருமுறை டீலர்களுக்கு வெளிப்படையான, சூத்திரம் அடிப்படையிலான வரம்பு திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது..
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் முரளி ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் உருவாக்கம், கிராமப்புற இந்தியா முழுவதும் எரிபொருள் கிடைப்பதை விரிவாக்க உதவியது. விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் தேசிய வளர்ச்சியை வலுப்படுத்தியது.
2025ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா உலகின் மிகப்பெரிய எரிசக்தி சில்லறை விற்பனை அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் நிலையங்கள் 88,000 ஆகவும், தனியார் நிறுவன நிலையங்கள் 13,000 ஆகவும் உள்ளன. ஆனால், ஒரு நிலையத்தின் சராசரி மாதாந்திர விற்பனை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2012ல், சராசரியாக 170 கிலோ லிட்டர் விற்ற நிலையில் தற்போது, 140 கிலோ லிட்டராக குறைந்துள்ளது.
நவீன வாகனங்கள், எரிபொருட்கள்
நவீன வாகனங்கள் குறைவான எரிபொருளை பயன்படுத்துகின்றன, எரிபொருள் திறனும் மேம்பட்டுள்ளது. எலக்ட்ரிக், சி.என்.ஜி., வாகனங்களின் எழுச்சி, அத்துடன் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக எரிபொருள் பெறுவது ஆகியவை விற்பனையை மேலும் பாதித்துள்ளன. இதன் விளைவாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள் வருமானம் குறைந்து வருகிறது.
எரிபொருள் விற்பனையிலும் பெரிய லாபம் இல்லை . ஒருவர் 100 ரூபாய்க்கு எரி பொருள் நிரப்பினால் அதில், 35-40 ரூபாய் வரை மத்திய மற்றும் மாநில வரிகளான கலால் வரி மற்றும் வாட் பூர்த்தி செய்ய செல்கிறது. அடுத்து 45-50 ரூபாய் வரை இறக்குமதி, சுத்திகரிப்பு, போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தலுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்கிறது. வெறும் 2.50-3.50 ரூபாய் மட்டுமே டீலருக்கு கிடைக்கிறது. எனவே, டீலர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவதில்லை.
வெளிப்படையான வரம்பு திருத்தம்
எனவே, விநியோகஸ்தர்களின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிப்படையான, சூத்திரம் அடிப்படையிலான வரம்பு திருத்தம் செய்ய வேண்டும். எரிபொருள் மற்றும் எரிசக்தி கொள்கைகளை உருவாக்கும்போது ஆலோசிக்க வேண்டும்.
வலுவான மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பான விநியோகஸ்தர் பிணையம் இல்லாவிட்டால், இந்தியாவின் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் தான் ஏற்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications