டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிக்கப்படுமா? ப்ளாக்கில் விற்பதை தவிர்க்க கோரிக்கை! அமைச்சர் ரியாக்ஷன்!
சென்னை : ப்ளாக்கில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதை தவிர்க்க, டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் மெளலானா கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை குறித்து அமைச்சர் எதுவும் குறிப்பிடாததால் டாஸ்மாக் நேரம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வரும் நிலையில், காலை முதலே தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அருகிலேயே அதிக விலைக்கு மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும், ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதைத் தவிர்க்கலாம் என கோரிக்கை விடுத்தார் ஹசன் மௌலானா.

அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரை ஆற்றும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார். அதேபோல் ஊதியத்தை அதிகரிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தையும் அதிகரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

ஆனால், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் மெளலானாவின் கோரிக்கைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் எதுவும் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications