"எப்புட்றா.." ஏசி எல்லாம் தேவையே இல்லை! வீட்டை சில்லுனு மாற்ற முடியுமாம்.. இந்த பெண் சொல்வதை பாருங்க
சென்னை: ஏசி, ஏர் கூலர், ஃபேன் என எதுவும் இல்லாமல் வெப்பநிலையைப் பெண் ஒருவர் கணிசமாகக் குறைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பூமியில் வெப்பத்தின் அளவு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் புதிய உச்சத்தில் பதிவாகிறது.
பருவநிலை மாற்றம் உட்பட இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. வெப்ப நிலை இப்படித் தொடர்ந்து உயர்வதால், பொதுமக்கள் மட்டுமின்றி விலங்குகள் உட்பட அனைத்தும் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

வெப்பம்: இந்த சுட்டெரிக்கும் வெப்பம் சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்குச் சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பம் அதிகபட்சமாக 106 டிகிரி வரை கூட சென்றது. இதனால் மதிய நேரத்தில் பொதுமக்களால் வெளியே கூட வர முடிவதில்லை. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் ஏசிக்களையே நம்பி இருக்கிறார்கள். ஏசி அறைகளை விட்டு வெளியே வரவே பல முறை யோசிக்கிறார்கள்.
ஏசிக்களால் உள்ளே அறையில் குளுகுளுவென இருந்தாலும், சுற்றுச்சூழல் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஏசி இல்லாமலேயே வெப்ப நிலையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இதைத்தான் எளிமையாக விளக்கும் வகையில் இளம்பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுபாஷினி சந்திரமணி என்ற அந்த பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
13 டிகிரி குறைந்த வெப்பம்: அந்த பெண் தனது வீட்டின் வெளியே ஒரு இடத்தில் வெப்பத்தை அளக்கிறார். அங்கே 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம். அதேநேரம் அவர் வீட்டிற்கு வெளியே மற்றொரு இடத்தில் வெப்பத்தை அளக்கிறார். அங்கே வெப்பம் 27 டிகிரி அதாவது, 82 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் மட்டுமே பதிவாகியுள்ளது. இப்படி மிகப் பெரியளவில் வெப்பம் மாறியுள்ளது.
அதற்கு எந்த காரணமும் இல்லை. மரங்கள் தான் காரணம். மரம் இருக்கும் இடத்தில் வெப்ப நிலை 13 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக உள்ளது. ஏசி, ஏர் கூலர், ஃபேன் என எதுவும் இல்லாமல் இந்த பெண் வெப்ப நிலை எப்படி மரங்களால் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டியுள்ளார். அந்த பெண் மேலும், "சூரியனின் வெப்பம் என்பது சிமெண்ட் ஸ்லாப்பிற்கு கீழும் மரத்தின் நிழலிலும் எந்தளவுக்கு வேறுபட்டு உள்ளது என்பதை நீங்களே பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்: சிமெண்ட் ஸ்லாப்பிற்கு கீழ் சற்று நிழல் இருந்தாலும் கூட அதன் வெப்பம் குறையவில்லை. அங்கே இருக்கும் மரத்தின் நிழல் என்பது வெப்பத்தைக் கணிசமாக 13 டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளதை இது காட்டுகிறது. அந்த பெண்ணின் ட்வீட் இப்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவர் தனது ட்விட்டரில், "அடேங்கப்பா.. 13 டிகிரி வித்தியாசம்! ஆச்சரியமாக இருக்கு.. நமது சாலைகளில் இருக்கும் நாய்களும் பூனைகளும் இந்த 45 டிகிரி வெப்பமான நடைபாதைகளில் வெறுங்காலுடன் நடக்கும் போது எவ்வளவு சிரமத்தை எதிர்கொள்ளும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொருவர், "நேரடி சூரிய ஒளியில் இருப்பதை விட மரத்தின் நிழலில் எந்தளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. மரங்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூறாவளியில் வீட்டின் பின்புறம் இருந்த 30 ஆண்டுகள் பழமையான மா மரத்தை இழந்துவிட்டோம். அதன் பிறகு ஒவ்வொரு கோடைக் காலமும் மிகவும் வெப்பமானதாக மாறிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்த்தரப்பு வாதம்:அதேநேரம் நகர்ப்புறங்களில் ஜனத்தொகை அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் வாழ இடங்கள் தேவைப்படுவதால்.. வேறு வழியின்றி மரங்கள் வெட்டப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பல்வேறு இடங்களிலும் நடக்கிறது. இதனால் மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை என்று ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications