பாலியல் தொல்லை: பெண் கொடுத்த புகாரில் கணவர், மாமனார் கைது
சென்னை: சொந்த மாமனாரே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு கணவரே உடந்தையாக இருந்தார் என்றும் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் உதயராஜ் (62). தொழில் அதிபர். இவரது மகன் தீபக்(27). இவர் தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்கிறார். தீபக்கிற்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ஹர்ஷா(25). இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, ஹர்ஷாவும், தீபக்கும் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.
ஹர்ஷா சென்னை சவுகார்பேட்டையில் தனது தந்தையுடன் வாழ்கிறார். இந்த நிலையில் ஹர்சா, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், அவர் தனது மாமனார் உதயராஜ் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை சொல்லி இருந்தார்.
ஒரே வீட்டில் வசித்தபோது, தனது மாமனார் உதயராஜ் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்றும், இதுபற்றி தனது கணவரிடம் கூறியும், அவர் அதற்கு ஒத்துப்போக சொல்லி தன்னை அவமானப்படுத்தினார் என்றும், ஹர்ஷா தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக தனது மாமனார் மீதும், தனது கணவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
இந்த புகார் தொடர்பாக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹர்சாவின் மாமனார் உதயராஜ், கணவர் தீபக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications