தற்கொலை முயற்சிக்கு கந்துவட்டி தொல்லையை காரணம் காட்டிய திருவண்ணாமலை பெண்ணின் நாடகம் அம்பலம்!
கந்துவட்டி தொல்லையே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று நாடகமாடிய திருவண்ணாமலை பெண் பிடிபட்டார்.
திருவண்ணாமலை: கந்துவட்டி தொல்லை காரணமாக நேற்று திருவண்ணாமலையில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். தற்போது அந்த தற்கொலை முயற்சி நாடகம் என்று தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலையில் வசித்து வரும் அருள்செல்வம் என்பவரது மனைவி மகாலட்சுமி. இவர் 2015ம் ஆண்டு பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் செய்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள், செல்வி என்பவர்களிடம் 15 லட்சம் பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் மேலும் 15 லட்சம் கேட்டு தொல்லை தருகிறார்கள் என்று கூறி நேற்று தற்கொலைக்கு முயன்றார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டனர். இது குறித்து காவல் துறையில் புகார் எதுவும் அளிக்காத போதும், காவல்துறையினர் தாமாகவே விசாரணையைத் தொடங்கினர். இதில் மகாலட்சுமியின் தற்கொலை நாடகம் என்று தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், 'தொழில் தொடங்க 2015ம் ஆண்டு 10 பைசா வட்டிக்கு 15 லட்சம் பணம் வாங்கிய மகாலட்சுமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டியோ, அசலையோ திரும்ப செலுத்தவில்லை. அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறார்.
அதன்பின், எப்படியாவது கடன் கொடுத்தவர்களை சிக்கவைத்துவிட்டால், தான் தப்பித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட மகாலட்சுமி. தனது கணவரின் துணையோடு இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்' என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications