சிதறிக் கிடந்த உடல் பாகங்கள்.. 2 மணி நேரம் போராடிய மீட்புப்படை.. விருதுநகரை அலற வைத்த வெடி விபத்து!
விருதுநகர்: விருதுநகர் அருகே கல் குவாரியில் வெடி பொருட்கள் குடோன் வெடித்துச் சிதறியதில் தொழிலாளர்களின் உடல்கள் பல பாகங்களாகச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடம்பன்குளத்தில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல் குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் நேற்று (மே 1) பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கல்குவாரியில் உள்ள வெடிபொருள் கிடங்கில் எதிர்பாராத விதத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள ஏழெட்டு கல் குவாரிகளுக்கு தேவையான வெடி பொருட்களை அங்குள்ள கிடங்கில் சேகரித்து வைப்பது வழக்கமாம். அந்த வகையில் சுமார் 1500 கிலோ வெடிபொருட்கள் அந்த கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சரக்கு வாகனத்தில் இருந்து வெடி பொருட்களை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உராய்வின் காரணமாக அவை திடீரென வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. அப்போது கல்குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்புப் படையினர் சேகரித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வெடி விபத்தில் கல்குவாரியில் இருந்த இரண்டு வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தின் அதிர்வு சுமார் பல கி.மீட்டர் சுற்றளவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.
கல் குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த கல்குவாரியை மூடக் கோரி மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரி மீதும் கல்குவாரி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கல் குவாரி வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் கல்குவாரியின் பங்குதாரர் சேதுராமன் விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications