ஜெ. உடல்நிலை பாதிப்பை பயன்படுத்தி காவிரியில் அரசியல் செய்த மத்திய அரசு: மாலன் குற்றச்சாட்டு #cauvery
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்ததாக மூத்த பத்திரிகையாளர் மாலன் குற்றம்சாட்டியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் நெறியாள்கையில் நடத்தப்பட்ட காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில், ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பை பயன்படுத்தி அதிமுக அரசை சீர்குலைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன், சுதர்சன நாச்சியப்பனின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்று கூறினார். மேலும் மாலன் தெரிவித்த கருத்துகள்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அதை மத்திய அரசு அப்படியே ஏற்றுக் கொண்டது; ஆனால் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதாவது தமிழகத்தின் தலைமை பலவீனமாக இருக்கிறது என்பதை பயன்படுத்தி அப்படியே நிலைப்பாட்டை மாற்றி காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தது மத்திய அரசு.
இவ்வாறு மாலன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:
நரேந்திர மோடி எப்போதுமே ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி ஆட்சியை, மாநிலக் கட்சியின் ஆட்சியை எந்தெந்த வகையில் சிதறடிக்க வேண்டுமோ அத்திட்டத்தை அருணாச்சல பிரதேசத்தில் இருந்து எல்லா மாநிலங்களிலும் கையாளுகிறார்.

ஒவ்வொரு மாநிலத்திலும்...
மேற்கு வங்கத்திலே அதை செய்து கொண்டிருக்கிறார். பீகாரிலே அப்படி செய்ய முயற்சிக்கிறார். ஒவ்வொரு மாநிலங்களிலும் செய்து பார்க்கிறார். அது அவருடைய நடைமுறை. இதை சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாகவே சொல்லிக் காட்டுகிறார்.

இதுதான் மோடி நிலைப்பாடு
அதிமுக எனும் மாநிலக் கட்சியின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என்பது காங்கிரசின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் திமுக, அதிமுகவுடன் வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் துணை நின்று வருகிறது. பொதுவாக எந்தெந்த இடங்களில் மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கிறதோ அந்த வலுவைக் குறைப்பது என்பது பாஜகவை வளர்ப்பதற்கு துணை நிற்கும் என்பது மோடியின் நிலைப்பாடு.

அதிமுகவை கூறுபோட முயற்சி
இதனடிப்படையில் பல மாநிலங்களில் முயற்சித்து பிரதமர் மோடி, தோற்றும் போயுள்ளார் வென்றும் உள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவை கூறு போட முயற்சிக்கிறார் பிரதமர் மோடி.

ஆளுநர்கள் மூலம்..
வாஜ்பாய் காலத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டை பாஜக மேற்கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி, ஆளுநர்களை வைத்து மாநில கட்சிகளை மிரட்டுகிறார். மாநிலங்களுக்கு நிதி உதவி கொடுப்போம் என கூறிவிட்டு கொடுக்காமல் இருக்கிறார்.
அதிமுக இன்று கலக்கத்தில் இருக்கிறது.. இந்த கலக்கத்தை அதிகப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக.
இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications