விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி…
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான 'சக்திமான்' என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக் காலம் நெருங்குவதை ஒட்டி தொழிலாளர் விறுவிறுப்பாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு சுமார் 2 மணியளவில் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தினால், இரண்டு அறைகளில் இருந்து பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்து சிதறியது. இதனால், அந்த அறைகளும் இடிந்து விழுந்தது. அதில் அந்த அறைகளில் பணியில் ஈடுபட்டிருந்த, திருத்தங்கல்லைச் சேர்ந்த ஞானசேகரன் (32) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, காயமடைந்த ஞானசேகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஞானசேகரன் இறந்து விட்டார். இந்த வெடி விபத்து குறித்து விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் மட்மே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் வெடி விபத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications