திமுக வேட்பாளர் பட்டியல்: 97 பழைய முகம்... 76 புதுமுகம்... 11 டாக்டர்கள், 9 என்ஜினியர்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களில் 97 பேர் பழைய முகங்கள்... 76 பேர் புதுமுகங்கள். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் நீண்டகாலத்துக்குப் பின்னர் திமுக அதிக இடங்களில் இம்முறை போட்டியிடுகிறது. 1967-இல் திமுக ஆட்சியைப் பிடித்தபோது 178 தொகுதிகளில் போட்டியிட்டது. 1971-இல் 201 தொகுதிகளில் திமுக நின்றது. 1989-ல் 202 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதன் பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை தாரைவார்த்துக் கொடுத்த திமுக இம்முறை 173 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இந்த பட்டியலில் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

3 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை
திமுகவுக்கு தற்போது 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் சுப. தங்கவேலன், குன்னூர் கே ராமச்சந்திரன், புஷ்பலீலா ஆல்பன் ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எஞ்சிய 20 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

5 மாஜி அமைச்சர்களுக்கு நோ சீட்
அதேபோல் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், மைதீன்கான், பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரியகருப்பன், கீதா ஜீவன், பூங்கோதை, அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன், கே.பி.பி.சாமி, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, கு.பிச்சாண்டி என முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில் சுப. தங்கவேலன் மகன் திவாகரனுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஆனால் கே. சுந்தரம், உபயதுல்லா, என். செல்வராஜ், தமிழரசி, என்கேபிபி ராஜா ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

நம்பி வந்தவர்களுக்கு...
திமுகவை நம்பி வந்தவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மதிமுகவில் இருந்து வந்த கண்ணப்பன் மகன் மு.க. முத்து (உடுமலைப்பேட்டை), மதிமுக பொருளாளராக இருந்த மாசிலாமணி (மைலம்), அதிமுகவில் இருந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் (திருப்பரங்குன்றம்) ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

டாக்டர்கள், என்ஜினியர்கள்
திமுக வேட்பாளர் பட்டியலில் 11 டாக்டர்கள், 9 என்ஜினியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 107 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள்; 33 பேர் வழக்கறிஞர்கள்.

வாரிசுகளுக்கும்...
மேலும் வாரிசுகளும் வேட்பாள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மறைந்த என்.வி.என்.சோமு மகள் டாக்டர் எஸ்.என்.கனிமொழி, ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, தூத்துக்குடி பெரியசாமி மகள் கீதா ஜீவன், ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார், சுப.தங்கவேலன் மகன் சுப.த.திவாகரன், சேடபட்டி முத்தையா மகன் மணிமாறன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜன், சற்குணபாண்டியன் மருமகள் சிம்லா முத்துசோழன் ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தொகுதி மாறிய பொன்முடி
முன்னாள் அமைச்சர்கள் பலரும் குறுநிலமன்னர்களாக கோலோச்சிய தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர். ஆனால் பொன்முடி மட்டும் விழுப்புரம் தொகுதியில் இருந்து திருக்கோவிலூர் தொகுதிக்கு இடம் மாறியுள்ளார்.












Click it and Unblock the Notifications