மழைக்கு வீடு இடிந்து இளைஞர் பலி; தாய் படுகாயம்: சென்னை ஓட்டேரியில் சோகம்
சென்னை: கனமழை காரணமாக சென்னை ஓட்டேரியில் பழைய வீடு ஒன்று இடிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய்,45. இவரது கணவர் ரவிக்குமார்50, சில ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களின் மகன் ராஜூ, 23. கிண்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மகள் மேனகாவுக்கு திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கிறார்.
ராதாபாயின் வீட்டுக்கு அருகில் ஜமால் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. பாகப்பிரிவினை செய்வதில் தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் வீடு பாழடைந்து கிடந்தது. பழமையான வீட்டை இடிக்க அண்டைவீ்ட்டார் தடை உத்தரவு பெற்றதால், இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், பாதி இடிக்கப்பட்ட நிலையிலேயே அந்த வீடு அச்சுறுத்திக்கொண்டு இருந்தது.
சென்னையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில் இந்த வீடு மேலும் பலம் இழந்து நேற்று காலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. இடிந்த வீட்டின் கட்டிட பகுதிகள் பக்கத்தில் உள்ள ராதாபாய் வீட்டின் மீது விழ, அவர்களின் வீடும் இடிந்தது. இதில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ராதாபாய், ராஜூ ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கினர்.
கட்டிடம் இடியும் சத்தத்தை கேட்டு அருகே இருப்பவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் இறங்கினர். கொடுங்கையூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் இறங்கினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ராஜூ, ராதாபாய் இருவரையும் மீட்டு ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் ராஜூ பரிதாபமாக உயிரிழந்து விட்டார். படுகாயம் அடைந்த ராதாபாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேரை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மழைக்கு வீடு இடிந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications