கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட யுவராஜ் சரண்... சிபிசிஐடி ஆபிசுக்கு டூவீலரில் வந்தார்!
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், நாமக்கல்லில் சிபிசிஐடி அதிகாரிகள் முன் இன்று சரணடைந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தலித் இளைஞரான கோகுல்ராஜ், வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைவழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த மாதம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தன்னிடமிருந்த ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் யுவராஜ்.

இந்நிலையில், இன்று சரணடையப் போவதாக வாட்ஸ் அப் வாயிலாக ஆடியோ அனுப்பியிருந்தார் யுவராஜ். அதன்படி, நாமக்கல்லில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு யுவராஜ் சரணடைந்துள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை சரியான வழியில் செல்வதால் சரணடைய முடிவு செய்திருப்பதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக சிபிசிஐடி போலீசார் நடந்து கொள்ளவில்லை என்றும் தனது மனைவி மற்றும் உறவினர்களை துன்புறுத்தவில்லை என்றும் எனவே இதுவே தான் சரணடைய சரியான தருணமாக கருதுவதாகவும் யுவராஜ் தனது அடியோவில் கூறியிருந்தார்.

தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ் அடிக்கடி ஆடியோக்களை வெளியிட்டு வந்தது போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்தது. சந்தனக் கடத்தல் வீரப்பன் போல அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் ஆடியோக்களையும், வீடியோவையும் வெளியிட்டு வந்த அவர், விஷ்ணுப்பிரியா மரணத்திற்குப் பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டி பகிரங்கமாக பேசியது காவல்துறையினரை பெரும் கொதிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரைப் பிடிக்கும் வேட்டையை காவல்துறை தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டூவீலரில் ஹாயாக வந்த யுவராஜ்...
நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு டூவிலரில் வந்து சரணடைந்துள்ளார் யுவராஜ். முன்கூட்டியே சரணடையும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை யுவராஜ் வெளியிட்டிருந்ததால், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தனர். இதனால், சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்டார்
இந்நிலையில், யுவராஜ் தரையில் அமர வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அநத்ப் படத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் தரையில் அமர்ந்திருப்பது போலவும் அருகே காவல்துறை அதிகாரிகள் இருவர் மப்டியில் நிற்பது போலவும் உள்ளது.
எஸ்பி தீவிர விசாரணை
சரணடைந்த யுவராஜிடம் சிபிசிஐடி எஸ்பி. நாகஜோதி தீவிர விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முழுவதும் வீடியோவில் படமாக்கப்படுகிறது. சரணடைந்த ஒருவரை 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் இடைவிடாமல் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, யுவராஜின் வழக்கறிஞர் ஆனந்தன் கூறுகையில், சட்டப்படி விசாரணை மற்றும் வழக்கை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications