கும்பகோணத்தில் 70 வயது முதியவரை காப்பாற்ற முயன்ற 30 வயது கேட் கீப்பர்.. யாருக்குமே ஆகக்கூடாத நிகழ்வு
தஞ்சாவூர்: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுலுக்கு கடந்த ஆறு மாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கேட் கீப்பராக உள்ளதால், அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்தியோதயா ரயிலுக்காக கேட்டை பூட்டியிருந்தார். அப்போது ஒரு 70 வயது முதியவர் மூடிய கேட்டை பற்றி கவலைப்படாமல் சென்றுள்ளார். கேட் கீப்பர் சத்தம் போட்டார். ஆனால் கவனிக்காமல் சென்றார். இதனால் அவரை காப்பாற்ற கேட் கீப்பர் ஓடினார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
ரயில்வே கேட் கீப்பர் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் அவரை காப்பாற்ற நடந்த முயற்சி சோகத்தில் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் ராகுல் என்பவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சுந்தரபெருமாள்கோவில் பகுதியை அடுத்த கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில், கேட்கீப்பராக வேலை செய்து வந்தார். இதற்காக பாபநாசம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.

ராகுல் வழக்கம் போல் கடந்த 12ம் தேதி இரவு கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்தியோதயா ரயில் வந்து கொண்டிருந்தது. அவர் கேட்டை பூட்டி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மூடியிருந்த ரயில்வே கேட்டை மீறி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் ரயில் அருகில் வந்துவிட்டதால் இதனைக்கண்ட கேட் கீப்பர் ராகுல், அந்த முதியவரை தண்டவாளத்தில் இருந்து விலகுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அந்த முதியவர் தண்டவாளத்தை கடப்பதற்குள் ரயில் மிக அருகில் வந்துவிட்டது. இதை கவனித்த கேட்கீப்பர் ராகுல், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று அவரைத் தள்ளிவிட்டு அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்.
துரதிர்ஷ்டவசமாக ரயிலின் வேகத்தால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதில் ரயிலில் அடிபட்டு இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கும், ரயில்வே மேலாளருக்கும் உடனே தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த இடத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட ஊழியர்கள் அதே ரயிலில் ஏற்றி கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முதிய வர் யார்? தற்கொலை செய்வதற்காக அவர் தண்டவாளத்திற்கு வந்தாரா? இல்லை தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது. 70 வயது முதியவரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில், திருமணமான சில மாதங்களிலேயே 30 வயதாகும் கேட் கீப்பர் உயிரிழந்திருப்பது தஞ்சாவூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
